துருக்கி அதிபராக தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள தாயிப் எர்டோகனுக்கு பிரிட்டன் பிரதமர் தெரசா மே வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
550 இடங்களை கொண்ட துருக்கி நாட்டு பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. அதில், 52.5 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று தாயிப் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் துருக்கியின் அதிபராக தொடர்ந்து இரண்டாவது முறை பதவியேற்க உள்ளார் எர்டோகன்.
இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற தாயிப் எர்டோகனுக்கு பிரிட்டன் பிரதமர் தெரசா மே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், துருக்கி அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள எர்டோகனுக்கு வாழ்த்துக்கள். பிரிட்டன் மற்றும் துருக்கி இடையிலான இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவதற்கு இணைந்து செயல்படுவோம். மேலும், பிராந்திய பகுதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சிரியாவில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு தேவையான ஒத்துழைப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.