வடக்கு மாகாணத்திலிருந்து அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படுபவர்களின் வயதெல்லை 35 இலிருந்து 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.ஆளுநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் மக்களின் ஜீவனோபாயம் மற்றும் வேலையில்லாப் பிரச்சனை என்பவை பாரிய பிரச்சனைகளாக உள்ளது. அத்துடன் மக்கள் சந்திப்பு நாட்களில் பலர் வேலை தேடி வருகின்றனர்.அவர்களில் பட்டதாரிகள், ஆசிரியர்கள், அமைச்சுக்கள் – திணைக்களங்களில் நீண்டகாலம் சுயாதீனமாக வேலை செய்தவர்கள் என பலர் இருக்கின்றனர்.
அவர்களில் பலர் 10, 12 வருடங்கள் சுயாதீனமாக பணியாற்றியுள்ளனர். இதன்போது அவர்களது வயதெல்லை அதிகரித்துள்ளது. ஆகையால் அவர்களை பணியில் இணைத்துக்கொள்ளமுடியாத நிலை உருவாகியுள்ளது.இவ்வாறானவர்கள் தற்போது 35 வயதிற்கும் அதிகமான வயதை ஒத்தவர்களாக இருக்கின்றனர். எமது நாட்டில் அரச சேவைக்கான வயதெலலை 35 ஆகும்.
எனவே இந்நிலமையைக் கருத்தில் கொண்டு வடக்கு மாகாணத்தில் அரசசேவையில் இணைத்துக்கொள்ளப்படுபவர்களின் வயதெல்லையை 40 ஆக அதிகரிக்கத் தீர்மானித்துள்ளேன். இதன்மூலம் துன்பப்படும் மற்றும் வேலைவாய்பின்றித் தவிப்பவர்களுக்கு நன்மை கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கின்றேன்.