தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு மூன்று உறுப்பினர்களை நியமிப்பதற்கான நிறுவனங்கள் தொடர்பில் தெளிவற்ற தன்மை காணப்படுகின்றது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆணைக்குழு அமைக்கப்படாத நிலையில் இச்சட்டமூலம் முழுவதும் பயனற்றதாகிவிடும் எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று (24) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தகவல் அறியும் உரிமை சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
தகவல் உரிமைக்கான சட்டமூலத்தை வரவேற்கிறேன். அதேநேரம் இச்சட்டமூலத்தில் காணப்படும் சில விடயங்களில் தெளிவற்ற தன்மை காணப்படுகின்றன. அவற்றை சபையின் கவனத்திற்கும் கொண்டுவருகின்றேன். சட்டமூலத்தின் பிரகாரம் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவை நியமிக்கும் போது அதற்கு மூன்று வகை நிறுவனங்களின் உறுப்பினர்களின் பெயர்கள் அரசியலமைப்பு பேரவைக்கு பிரேரிக்க வேண்டும்.
ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களின் பெயர்களை குறித்து பிரேரிக்க வேண்டிய நிறுவனங்களில் முதலாவதாக இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் உள்ளது. அச்சங்கத்தின் மூலம் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. அடுத்து இரண்டாவதாக காணப்படுவது வெளியீட்டாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடக நபர்களின் அமைப்புக்களும் மூன்றாவதாக சிவில் அமைப்புக்களும் காணப்படுகின்றன.
இரண்டாவதும் மூன்றாவதுமாக கூறப்பட்டுள்ள ஒவ்வொரு நிறுவனங்கள் சார்பில் பல அமைப்புக்கள் உள்ளடங்குவதால் அந்நிறுவனங்கள் சார்பில் ஒவ்வொரு உறுப்பினர்களை அரசியலமைப்பு பேரவைக்கு பெயர் குறித்துரைப்பது எவ்வாறு என்பது தெளிவற்றதாகவுள்ளது என அவர் தெரிவித்தார்.