கீர்த்திமிக்க வரலாற்று பாரம்பரியங்களைக் கொண்ட எமது கடந்தகால கலாசார மரபுரிமைகளை பாதுகாத்து அவற்றை எதிர்கால தலைமுறைக்கு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று (24) பிற்பகல், புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பொலன்னறுவை ஹிங்குரக்கொட உனகலா வெஹர ரஜமகா விகாரையின் வரலாற்று முக்கியத்துவமிக்க தூபியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
பொலன்னறுவை வரலாற்று முக்கியத்துவமிக்க உனகலா வெஹர புண்ணிய பூமியை உலக வாழ் பௌத்த மக்கள் தரிசிப்பதற்கு ஏற்ற வகையில் புனர் நிர்மாணம் செய்யும் நடவடிக்கை ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்களையும் அனைத்து சமயங்களுக்குமான சமய ஸ்தாபனங்களையும் பாதுகாக்கவும் அவற்றின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஜனாதிபதியின் எண்ணக்கருவின்படி நடைமுறைப்படுத்தப்படும் ”எழுச்சி பெறும்
பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உனகலா வெஹர புனர் நிர்மாண நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்பட்டது.
பொலன்னறுவையில் உள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க பௌத்த மற்றும் இந்து தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்களில் உனகலா வெஹர முக்கிய இடம் வகிக்கின்றது.
நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து சைத்தியவின் தூபியை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் முதலாவது மலர் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
மல்வத்தை பிரிவின் அநுநாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர், சங்கைக்குரிய பஹமுனே சிறி சுமங்கல தேரர், சங்கைக்குரிய உடுகம தம்மானந்த நாயக்க தேரர், உனகலா வெஹர ரஜமகா விகாராதிபதி சங்கைக்குரிய கிறித்தலே ஞானீஸ்ஸர நாயக்க தேரர் ஆகியோர் உட்பட பிரதேசத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளும், பெருந்தொகையான மக்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்