சட்டவிரோதமான முறையில் ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு முயற்சிப்போர் குறித்த தகவல்களை அறிவிக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளாது வெளிநாட்டு தொழில் வாய்ப்பு முகவர் நிலையங்களை நடத்தி வருவது முற்றாக சட்டத்திற்கு விரோதமானது என்றும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி வெல்லவாய பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்று சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டதாக பணியகம் தெரிவித்துள்ளது. பணியகத்தின் விசாரணை பிரிவு சமீபத்தில் மேற்கொண்ட முற்றுகையின் போது இந்த முகவர் நிலையம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை நடத்திச் சென்ற 28 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிருந்து ஆறு கடவுச்சீட்டுக்கள், வெளிநாட்டு செல்வதற்கான தேவையான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன கைது செய்யப்பட்ட பெண் வெல்லவாய நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் இரண்டு இலட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.