சேது சமுத்திர திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை முன்னிட்டு மத்திய கப்பல்துறை செயலாளர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இந்திய நீர்வழிப் போக்கு வரத்துக்காக சேது சமுத்திர திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு அதற்காக பலகோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணியால் ராம-சேது பாலம் சேதம் அடையும் என ராம சேது பால பாதுகாப்பு கமிட்டி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ராம-சேது பாலம் சேதம் இல்லாத அளவில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற ஆலோசனை வழங்கியது. இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய மந்திரி நிதின் கட்கரி மற்றும் அதிகாரிகள் ராமேசுவரம் வந்து ஆய்வு நடத்தி சென்றனர்.
இந்த சூழலில் மத்திய கப்பல்துறை செயலாளர் ராஜீவ்குமார் தலைமையிலான 8 அதிகாரிகள் நேற்று மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை முகாமிற்கு வந்தனர். இன்று காலை ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்த அவர்கள் அங்கிருந்து கோதண்டராமர் கோவில் பகுதிக்கு சென்றனர்.
அங்கிருந்து இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் (தரையிலும் தண்ணீரிலும் செல்லக் கூடியது) கப்பலில் ஏறி 7 ஆண்டுகளுக்கு முன்பு சேது சமுத்திர திட்டம் நடைபெற்ற பகுதிக்கு சென்றனர். அங்கு மாற்றுப்பாதையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து அரிச்சமுனை கடற்கரை அருகே தற்போது முகுந்தராயர்சத்திரம்- தனுஷ்கோடி இடையே ரூ.50 கோடி செலவில் போடப்பட்டுள்ள சாலையை அவர்கள் பார்வையிட்டனர். அதன் பின்னர் பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தை ஆய்வு செய்து விட்டு மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு சென்றனர்.
அதிகாரிகளின் இந்த ஆய்வால் சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்திருப்பது உறுதியாகி உள்ளது.