உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற ஒற்றுமையோடு பாடுபடுவோம் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆரம்பித்து இன்று 12ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. தே.மு.தி.க.விற்கு என்று தனி வரலாறு உண்டு, எந்த கட்சியிடம் இருந்தும் பிரித்து வராமல் லஞ்சம், ஊழலுக்கு முற்றுபுள்ளி வைக்க தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக அனைத்து துறைககளிலும் முன்னேற்ற உறுதி கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சி.
அ.தி.மு.க., தி.மு.க. திட்டமிட்டே தே.மு.தி.க.வை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு தங்கள் ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம் மூலம் வரபோகும் உள்ளாட்சி தேர்தலை காரணம் சொல்லி மூளை சலவை செய்து தே.மு.தி.க.வை அழித்துவிடலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள்.
நம் கழகத்தினர் உண்மை விசுவாசத்தின் பிரதிபலிப்பாகவும், முன் எப்போதும் இருப்பதை காட்டிலும் பல மடங்கு ஒற்றுமையாகவும், உறுதியோடும் இருந்து வரப்போகும் தேர்தல்களை சந்தித்து தே.மு.தி.க. இன்று தமிழ்நாட்டில் அசைக்க முடியாத சக்தி என்றும், தமிழ்நாட்டில் யாரும் தவிர்க்க முடியாத மாபெரும் இயக்கம் என்றும், நம் உழைப்பால் உணர்த்துவோம்.
வரப்போகும் 12 ஆம் ஆண்டு துவக்கவிழா பொதுக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. அப்பொழுது கழக கொடிகளை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கியும், மரக்கன்றுகளை நட்டும், ஏழை, எளிய மக்களுக்கு இயன்றதை செய்வோம் இல்லாதவற்கே என்று நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்.
வெற்றி, தோல்வி வீரனுக்கு அழகு என்பதை கருத்தில் கொண்டு எதற்கும் அஞ்சாமல் எதிர்காலத்தில் நம் இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என்று உறுதி ஏற்போம். வரப்போகும் உள்ளாட்சி தேர்தலில் எத்தனையோ முறைகேடுகளை அரங்கேற்ற அ.தி.மு.க., தி.மு.க. திட்டமிட்டுருந்தாலும் அவற்றை முறியடித்து வெற்றி காண அனைவரும் ஒற்றுமையோடு பாடுபடுவோம்.
உண்மையான கொள்கைக்காக இலட்சியத்திற்காக என் மேல் கொண்ட பற்றின் காரணமாக நம் இயக்கத்தில் உள்ள இலட்சக்கணக்கான நல்ல உள்ளங்களுடன் என் பயணம் என்றும் தொடரும். நல்லவர்கள் இலட்சியம் வெல்வது நிச்சயம் என்ற உறுதியோடு தே.மு.தி.க. துவக்க நாளை வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.