கௌரவ நாமங்களை நீக்குவது குறித்து கவனம்

358 0

parliment1மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் கௌரவ நாமங்களை நீக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. மக்கள் பிரதிநிதிகளை விழிப்பதற்காக பயன்படுத்தப்படும் கௌரவ பட்டங்கள் பெயர்கள் அனைத்தையும் நீக்குவது தொடர்பில் நாடாளுமன்றில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இது நாடாளுமன்றின் நிகழ்ச்சி நிரலிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட நாடாளுமன்றம், மாகாணசபைகள், பிரதேச சபைகள் ஆகியனவற்றின் மக்கள் பிரதிநிதிகளின் பெயரின் முன்னால் பயன்படுத்தப்படும் அதி மேன்மைதாங்கிய, மேன்மைதாங்கிய, கௌரவ, மதிப்பிற்குரிய, சேர் போன்ற கெளரவ பெயர்கள் பட்டங்களை நீக்குவது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பெயருக்கு பின்னால் பயன்படுத்தப்படும் அவர்களே, ஐயா போன்ற கௌரவ பெயர் விழிப்புக்களை தவிர்க்கும் வகையிலும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.மக்கள் பிரதிநிதிகள் தாம் செய்யும் பணிக்காக மாதாந்தம் கொடுப்பனவு பெற்றுக்கொள்வதனால் அவர்களை அதி உயர் கௌரவ பட்டங்களைக் கொண்டு விளிக்க வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு சேவையும் கௌரவ சேவையாக கருதப்பட முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே ஜனாதிபதி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை கெளரவ நாமம் கொண்டு விழிப்பதனை தவிர்க்கும் வகையில் நாடாளுமன்றில் சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்பட்டு அதனை நிறைவேற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.