அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருந்த சிறிலங்கா இராணுவம்

363 0

08_gunaratne_wவிடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், சிறிலங்கா மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல்  நடத்தக் கூடும் என்று  அப்போதைய பாதுகாப்புச் செயலர் கோத்தாபய   ராஜபக்சவும், சீன இராணுவத் தளபதியும் எச்சரிக்கை விடுத்திருந்ததாக தெரிவித்துள்ளார் மேஜர்  ஜெனரல் கமால் குணரத்ன.

அவர் எழுதி வெளியிட்டுள்ள ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

‘2009 மே 16ஆம் நாள் புலிகளை சுமார் 800 சதுர மீற்றருக்குள் அடைத்துக் கொண்டோம். அதன் பின்னர், அவர்கள் மீதான எமது முதலாவது தாக்குதலை 17ஆம் நாள் மேற்கொண்டோம்.

நந்திக்கடல் களப்பின் வடக்கே இராணுவத்தின் 53ஆவது படைப்பிரிவு நிலைகொண்டிருந்தது. கிழக்கில், 58ஆவது படைப்பிரிவு நிலைகொண்டிருந்தது. மேற்காக, களப்பு காணப்பட்டது.

மே 17ஆம் நாள் அதிகாலை, நந்திக்கடல் களப்பிலிருந்து படகுகள் பல விரைந்து வந்தன. அவற்றில், ஆறு தற்கொலைத் தாக்குதல் படகுகள்  காணப்பட்டன. அவை, தரையிலிருந்த எமது படைப்பிரிவு இருக்கும் திசைநோக்கி வந்து வெடித்துச் சிதறின.

இருப்பினும், எமது படையினர், விட்டுவைக்கவில்லை. எதிர்த் தாக்குதல்களை நடத்தினர். இதுவே, பிரபாகரனைக் காப்பாற்றுவதற்காக, புலிகளால்  நடத்தப்பட்ட இறுதித் தாக்குதல்.

எமது பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு, பிரபாகரனை மாங்குளம் காட்டுக்கு அழைத்துச் செல்லவே, அவர்கள் முயற்சித்தனர். அப்படி நடந்திருந்தால், மேலும் 6 மாதங்களுக்கு, போர் நீடித்திருக்கும்.

புலிகள் இயக்கத்தினரால், மாங்குளம் காட்டில் ஆயுதங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த விடயத்தை, அதன்பிறகே நாம் உறுதி செய்துகொண்டோம்.

மக்களோடு மக்களாக, இரவு வேளைகளில் இராணுவப் பிரதேசத்துக்குள் நுழைய விடுதலைப் புலிகள் முயற்சி செய்தனர். இரவு வேளைகளில், இராணுவ பிரதேசத்துக்குள் எவரையும் அனுமதிக்க வேண்டாமென நான் உத்தரவிட்டேன்.

இருப்பினும், சிலர் கலவரப்பட்டதால், இராணுவ அதிகாரியொருவர், வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார். இதன்போது, மக்கள் மத்தியில் மறைந்திருந்த புலிகள், எம்மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.

சுமார் 300 மீற்றர் நீளமான எமது பாதுகாப்பு வேலி உடைந்தது.  அதனூடாக, புலிகள் வரத் தொடங்கினர். இருப்பினும் நாம், பின்னாலிருந்து தாக்கத் தொடங்கினோம். 18ஆம் நாள் அதிகாலையில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

பிரபாகரனின் மூத்த புதல்வர் சார்ள்ஸ் அன்ரனி, இந்தத் தாக்குதலின் போதே கொல்லப்பட்டார்.

இந்தத்தாக்குதலில் காயமடைந்த இராணுவ வீரர் ஒருவருக்கு சிகிச்சையளிப்பதற்காக, எமது படையினர் அவரை, நோயாளர் காவு வண்டியொன்றில் ஏற்றிக்கொண்டு சென்றார். அந்த வண்டி மீதே, புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைக் கேள்வியுள்ள படையினர், அவர்கள் மீது தாக்குதல் நடத்திக் கொன்றனர்.

அப்போது, மேற்படி வண்டி தீப்பற்றி எரிந்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் தான், வதந்தி பரவி, அனைத்துலகம் வரை சென்றது. பிரபாகரன், அதில் தான் உயிரிழந்திருந்தார் என்று கூறப்பட்டது.

இராணுவத் தளபதியும், இது தொடர்பில் என்னிடம் விசாரித்தார்.  நான் அவருக்கு, நடந்த உண்மையைக் கூறினேன்.

இறுதிக்கட்ட போரின் போது, சிறிலங்கா மீது அமெரிக்கா  தாக்குதல் நடத்தக் கூடிய சாத்தியம் இருந்தது. போரின் இறுதிக் காலத்தில், அமெரிக்கா உள்ளிட்ட பலம்வாய்ந்த பல நாடுகள், சிறிலங்கா அரசாங்கத்துக்கு பாரிய அழுத்தங்களைக் கொடுத்தன.

மூன்றாம் தரப்பினரிடம், புலிகள் இயக்கத்தினர் சரணடைய இடமளியுங்கள் என்று அந்த நாடுகள் கோரின. இருப்பினும், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, தீர்க்கமானதொரு முடிவில் இருந்தார். புலிகள் சரணடைவதாயின், அது சிறிலங்கா இராணுவத்தினரிடத்தில் மாத்திரமே.  வேறு எவரிடத்திலும் அவர்கள் சரணடைய முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

இதனால், சிறிலங்கா மீது  அமெரிக்காவினால் தாக்குதல் நடத்தக்கூடும் என்று, அவர் எமக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அப்போது, சீனாவின் இராணுவத் தளபதியும் என்னைத் தொடர்புகொண்டு, அமெரிக்கப் படைகள், சிறிலங்கா மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

அவ்வாறான தாக்குதலொன்று இடம்பெற்றால், அதிலிருந்து படையினர் தப்பிக்கொள்வது எவ்வாறு என்பது தொடர்பில், நாம் திட்டமொன்றை வகுத்திருந்தோம்.

இருப்பினும், அவ்வாறானதொரு தாக்குதல் தொடர்பில், நாம் எமது படையினருக்கு அறிவித்திருக்கவில்லை. படைத் தளபதிகள், படைப்பிரிவுகளின் தளபதிகள் மாத்திரமே இதனை அறிந்திருந்தனர்’ என்று தெரிவித்துள்ளார்.