ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும், அங்கு முழு அமைதி திரும்ப வேண்டும் என்பது மட்டுமே அரசின் விருப்பமாக உள்ளது. இதற்கான பணிகளில் தான் மத்திய அரசு ஈடுபட்டு வருகின்றது.
காஷ்மீரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தி அங்கு அமைதியை கொண்டு வருவது எங்களின் மிகப்பெரிய இலக்கு. பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் பணிகளில் ஈடுபட நமது பாதுகாப்பு படை எப்போதும் தயாராக உள்ளது.
மாநிலத்தில் அமைதி ஏற்பட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். பயங்கரவாதிகளின் எந்தவிதமான தாக்குதல் முயற்சியையும் முறியடிக்க பாதுகாப்பு படைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்