துபாய், சார்ஜாவில் இருந்து சென்னைக்கு ‘லேப்-டாப்’பில் மறைத்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாய், சார்ஜாவில் இருந்து சென்னைக்கு ‘லேப்-டாப்’பில் மறைத்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 வாலிபர்கள் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது கேரளாவை சேர்ந்த வர்கீஸ் (வயது 29) என்பவரின் உடமைகளை சோதனை செய்தனர்.
அவரிடம் இருந்த ‘லேப்-டாப்’பின் எடை வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அதனை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் 9 தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து ரூ.13 லட்சம் மதிப்புள்ள 450 கிராம் தங்கக்கட்டிகளை கைப்பற்றினார்கள். இதுதொடர்பாக கேரள வாலிபரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சார்ஜாவில் இருந்து சென்னைக்கு மற்றொரு விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த அஸ்மத் (31) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது அவரது ‘லேப்-டாப்’பும் எடை அதிகமாக இருந்ததால் அதனை பிரித்து பார்த்தனர்.
அப்போது அதில் தங்கக்கட்டிகள் இருந்தன. அவரிடம் இருந்து ரூ.47 லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அஸ்மத்தை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.