பேர்ஸ்டோவ், ஹேல்ஸ் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

269 0

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 242 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. 

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
இங்கிலாந்து அணி முதலில் இருந்தே ஆஸ்திரேலியா பந்து வீச்சை பதம் பார்த்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அடித்து ஆடினர். அணியின் எண்ணிக்கை 159 ஆக இருக்கும் போது முதல் விக்கெட்டாக ஜேசன் ராய் 61 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய அலெக்ஸ் ஹேல்சும் அதிரடியை தொடர்ந்தார். இதனால் அணியின் எண்ணிக்கை ஒரு ஓவருக்கு 8 ரன்களாக உயர்ந்தது.அணியின் எண்ணிக்கை 310 ஆக இருந்தபோது சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோவ் சதமடித்ததுடன் 92 பந்துகளில் 5 சிக்சர், 15 பவுண்டரியுடன் 139 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அவரை தொடர்ந்து ஹேல்சும் சதமடித்தார். அடுத்து இறங்கிய ஜோஸ் பட்லர் 11 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் இயன் மார்கன் 30 பந்துகளில் 6 சிக்சர், 3 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பொறுப்புடன் ஆடிய ஹேல்ஸ் 92 பந்துகளில் 5 சிக்சர், 16 பவுண்டரியுடன் 147 ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 4 விக்கெட்டுக்கு 459 ரனகள் எடுத்திருந்தது. இதன் மூலம் ஏற்கனவே தான் அடித்திருந்த 444 ரன்களை கடந்து இங்கிலாந்து அணி உலக சாதனை புரிந்துள்ளது.இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் ஜேய் ரிச்சர்ட்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 482 ரன்கள் என்ற கடின் இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. டிராவிஸ் ஹெட் 51 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 44 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் ஆஸ்திரேலிய அணி 37 ஓவர்களில் 239 ரன்களில் ஆல் அவுட்டாகினர்.
இங்கிலாந்து அணி சார்பில் அடில் ரஷித் 4 விக்கெட்டும், மொயின் அலி 3 விக்கெட்டும், டேவிட் வில்லி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி 242 ரன்கள்  வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ஆட்ட நாயகனாக அலெக்ஸ் ஹேல்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Leave a comment