விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக்கொன்றமைக்கு பிரதியுபகாரமாக 20 இலட்ச ரூபாவை உயிரிழந்த நபரின் நெருங்கிய உறவினர்களுக்கு வழங்குமாறு இராணுவ உறுப்பினருக்கு உத்தரவிட்டுள்ளமை அவரை தண்டிப்பதற்கு சமனானது என கூட்டு எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
விமல் விக்ரம என்ற குறித்த இராணுவ உறுப்பினர் தனது கடமையைச் செய்துள்ளதாகவும், எனினும் அவருக்கு எதிராக சாட்சியங்கள் உருவாக்கப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றம்சாட்டியுள்ளார்.
யுத்தம் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இராணுவத்தில் இணைந்து பணியாற்றி தற்போது ஓய்வில் சென்றுள்ள விமல் விக்ரம என்ற இராணுவ உறுப்பினருக்கு தற்போது ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தற்கொலைதாரி ஒருவரை கைது செய்து தடுத்து வைத்திருந்ததோடு, அவர் தப்பித்துச் செல்ல முற்படுகையில் அவரை சுட்டுக்கொன்றார்.
சர்வதேச நியமங்களுக்கு அமைய யுத்தம் முன்னெடுக்கப்பட்டதால் அவரை குற்றவாளியெனக் குறிப்பிட்டு வடக்கில் வழக்கு விசாரணைகளை முன்னெடுத்ததோடு, சாட்சிகளை உருவாக்கி கொழும்பிலும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இறுதியில் தீவிரவாதியை சுட்டுக்கொன்றமை குற்றமென அறிவித்ததோடு, ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர் 20 இலட்ச ரூபாவை உயிரிழந்த நபரின் நெருங்கிய உறவினர்களுக்கு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
22 வருடங்கள் இராணுவ சேவையாற்றிய ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நாடு எமக்கு சாபமிடும். இந்த பணத்தை அரசாங்கம் செலுத்தப்போவது இல்லை. நாம் ஒன்றிணைந்து பணத்தை சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.