கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மக்கள் அமைதியாக வாழ, காவிரி பிரச்னையில் அரசியல் கட்சிகள், பொறுப்புடன் செயல்பட வேண்டும், என, அமைச்சர் பொன்.ராதாகிருஸ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின், கர்நாடகா, காவிரியில் தண்ணீர் திறந்துள்ளது.
ஆனால், கர்நாடகாவில் மொழி தீவிரவாதிகள், தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்; இது, கண்டனத்துக்குரியது.
தமிழகத்திலும் கூட, ஆன்மிக சுற்றுலா வந்த கன்னடர்களை, தமிழகர்கள் சிலர் தாக்கி உள்ளனர்.
அதுவும் தவறு தான் கேவலமானதும் கூட.
தமிழகத்திற்கு, இப்போதைய தேவை இரண்டு தான். காவிரியில் தண்ணீர் வர வேண்டும் கர்நாடகத்தில் உள்ள மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். இரண்டுக்கும், மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, காவிரி பிரச்னையில் சரியான நடவடிக்கை எடுத்து வருவதோடு, தி.மு.க., தலைவர் கருணாநிதியும் அமைதியான சூழ்நிலை உருவாக வலியுறுத்தியுள்ளது, நல்ல அரசியல் அணுகுமுறை.
மற்ற அரசியல் தலைவர்களும் இப்படி பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்.
இப்பிரச்னையில் நிரந்தர தீர்வு காண, இரு மாநில முதல்வர்களும் சந்தித்து பேச வேண்டும். அதற்கு, மத்திய அரசு துணையாக இருக்கும் என பொன்.ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.