பெங்களூரு புறநகரில் உள்ள கருணாநிதி மகளின் பண்ணை வீடு முற்றுகை

363 0

201609140706062327_karunanidhi-daughter-farmhouse-siege-in-bangalore_secvpfஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காவிரி பிரச்சினையில் தமிழகத்தில் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று முன்தினம் கன்னட அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இதையடுத்து, பெங்களூருவில் 144 தடை உத்தரவும், நகரில் உள்ள 16 போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிராக பெங்களூருவில் நேற்று ஒரு சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், பெங்களூரு புறநகர் கனகபுரா ரோட்டில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் செல்விக்கு சொந்தமான பண்ணை வீட்டை நேற்று காலையில் கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் திடீரென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அப்போது அவர்கள், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிராகவும், தமிழகத்துக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பினார்கள்.

அத்துடன் தமிழகத்தில் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதால், கர்நாடகத்தில் உள்ள செல்விக்கு சொந்தமான பண்ணை வீட்டை அரசு கையகப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கன்னட அமைப்பினர் அத்துமீறி கோசங்களை எழுப்பினார்கள்.

பின்னர் செல்வியின் பண்ணை வீட்டின் முன்பக்கத்தில் உள்ள இரும்பு கதவின் வழியாக ஏறி கன்னட அமைப்பினர் உள்ளே நுழைய முயன்றார்கள். உடனே அவர்களை காவல்துறையினர் கீழே இறக்கினார்கள்.

இதனால் காவல்துறையினருடன் கன்னட அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். பின்னர் அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் சமாதானமாக பேசினார்கள். இதையடுத்து, கன்னட அமைப்பினர், அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

கன்னட அமைப்பினரின் திடீர் போராட்டத்தால் செல்வியின் பண்ணை வீட்டுக்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.