வடகொரியா அணுகுண்டு சோதனை – தென் கொரியாவுக்கு போர் விமானங்களை அனுப்பியது அமெரிக்கா

361 0

201609140804381142_us-flies-bombers-over-south-korea-in-show-of-force-to-north_secvpfவடகொரியாவின் அணுகுண்டு சோதனையை தொடர்ந்து, தென்கொரியாவுக்கு ஒலியை விட வேகமாக பறந்து குண்டு வீசும் ஆற்றல் வாய்ந்த போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பியது.

ஐ.நா. பாதுகாப்பு சபையின்; தீர்மானங்களை மீறும் விதத்தில் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.
ஏற்கனவே 3 முறை அணுகுண்டு சோதனையும், கடந்த ஜனவரி மாதம் 6ஆம் திகதி அணுகுண்டை விட சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையும் நடத்திய வடகொரியா கடந்த 9ஆம் திகதி 5வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தி, அது வெற்றி கண்டிருப்பதாக அறிவித்துள்ளது.

இதுவரை வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனைகளில் இந்த சோதனைதான் மிகவும் சக்தி வாய்ந்தது என சொல்லப்படுகிறது.

இந்த அணுகுண்டு சோதனையை உலகுக்கு அறிவித்த வடகொரியா, ‘இந்த அணுகுண்டு சோதனைமூலம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் நடுத்தர ஏவுகணையில் அணுகுண்டை செலுத்தும் திறனை அடைந்திருக்கிறோம்’ என கூறியது.

வடகொரியாவின் இந்த செயல், உலக நாடுகளின் கண்டனத்துக்கு வழி வகுத்தது.
இதுகுறித்து அவசரமாக கூடி விவாதித்த ஐ.நா. பாதுகாப்பு சபை, வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்போவதாக அறிவித்தது.

இந்த நிலையில் வடகொரியாவின் அண்டை நாடான தென் கொரியாவுக்கு அமெரிக்கா நேற்று 2 போர் விமானங்களை அனுப்பியது.
இவை ஒலியை விட வேகமாக பறந்து சென்று குண்டு வீசும் ஆற்றல் வாய்ந்த ‘சூப்பர்சோனிக்’ வகை போர் விமானங்கள் ஆகும்.

இந்த போர் விமானங்களின் பின்னால் அமெரிக்கா மற்றும் தென்கொரிய விமானங்கள் பாதுகாப்புக்கு சென்றன.

அமெரிக்காவின் போர் விமானங்கள், ஓசான் விமான தளத்தின் மீது பறந்ததை முன்னணி செய்தி நிறுவனத்தின் புகைப்பட கலைஞர் பார்த்ததாக தகவல்கள் கூறுகின்றன.

அந்த விமான தளம், வடகொரியா எல்லையில் இருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ளது.

தென்கொரியாவுக்கு போர் விமானங்களை அனுப்பி தனது ஆதரவை தெரிவிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில், அந்த நாட்டின் போர் விமானங்கள் அங்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.