ஆங்கிலேய ஆட்சியாளர் ஆஷ் துரையை வீரன் வாஞ்சிநாதன் சுட்டு வீழ்த்திய நாள் இன்று ஜூன் 17. இதுவரை வீரன் வாஞ்சிநாதன் உடலை ஆங்கிலேய அரசு என்ன செய்தது என்பது திரைவிலகாத மர்மமாக இருந்து வருகிறது.
இங்கிலாந்தில் இருந்து தப்பி புதுவையில் தங்கியிருந்த வ.வே.சு ஐயரின் சீடராக திகழ்ந்தார் வாஞ்சிநாதன். திருநெல்வேலியின் பொறுப்பு ஆட்சியராக இருந்த ஆங்கிலேயர் ஆஷ்துரை, மதத்தின் பெயரிலான தீண்டாமை உள்ளிட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிரானவராக இருந்தார்.
இது வாஞ்சிநாதன் உள்ளிட்டோரை கொந்தளிக்க வைத்தது. 1911-ம் ஆண்டு ஜூன் 17-ந் தேதி கொடைக்கானலுக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த ஆஷ்துரையை வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
பின்னர் அதே இடத்தில் வாஞ்சிநாதனும் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆஷ்துரையின் உடலை பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் இங்கிலீஷ் சர்ச் கல்லறையில் அடக்கம் செய்தனர்.

ஆனால் வீரன் வாஞ்சிநாதனின் உடலை ஆங்கிலேய அரசு என்ன செய்தது என்பது இதுவரை தெரியவில்லை. ஆங்கிலேய அதிகாரியை சுட்டு வீழ்த்திய வீரன் வாஞ்சிநாதனின் சட்டைப் பையில் இருந்ததாக கூறப்படும் கடிதத்தின் வரிகள் இவை:
ஆங்கிலேய சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்து அவமானப்படுத்திவருகிறார்கள். நாம் ஆங்கிலேயரை துரத்தி தர்மத்தினையும், சுதந்திரத்தினையும் நிலைநாட்ட வேண்டும்.
எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜூனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது.

அவன் எங்கள் தேசத்தில் காலைவைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராஸிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன்.
இவ்வாறு வாஞ்சிநாதனின் கடிதம் தெரிவிக்கிறது.