அரசியல் வாதிகளுக்குச் சிலைவைப்பதைவிட அர்ப்பணிப்புள்ள வைத்தியர்களுக்கு சிலைவைக்க வேண்டும் -அனந்தி சசிதரன்

278 0

அரசியல் வாதிகளுக்குச் சிலை வைப்பதை விட, நாட்டில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுகின்ற வைத்தியர்களுக்கு சிலை வைத்து அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்த அமைச்சர் அனந்தி சசிதரன் அங்கு பணியாற்றுகின்ற பொதுவைத்திய அதிகாரி Dr.காந்தநேசனுடைய சேவைமனப்பாங்கை பாராட்டி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அங்கு தொடர்ந்து பேசுகையில்: இவ் வைத்தியசாலையலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர் Dr.காந்தநேசன் இரவு, பகல் பார்க்காது நோயாளர்களின் நலன் கருதி அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறார். இங்கு தாதியர் ஒருவர் இல்லாதிருந்தும், இவ் வைத்தியசாலையின் நிர்வாகத்தினை, பணியை சீரும் சிறப்புமாக மேற்கொண்டு வருகிறார். இவ் வைத்தியசாலையை முன்னேற்றுவதில் முன்னின்று செயற்படுகிறார். இதனை இப் பகுதிமக்கள் அனுபவ ரீதியாக நன்கு உணர்ந்தவர்கள். தன்னுடைய கடமை நேரம் என்பதை விட நோயாளர்களின் நலனில் அதிக அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் கடமையாற்றும் இவர்களைப் போன்ற வைத்தியர்கள் உண்மையிலேயே மதிப்பளிக்கப்பட வேண்டியவர்கள். அப்போதுதான் வருங்கால சந்ததியினருக்கு இவையெல்லாம் சிறந்ததொரு படிப்பினையாக அமையும். இதனூடாக சிறந்த சேவை மனப் பாங்குடைய தேசத்தை கட்டியெழுப்ப முடியும். பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் மீது நான் கொண்ட அக்கறையின் பிரதிபலனாகவே இவ் நிதி ஒதுக்கீட்டை நான் கருதுகிறேன் என்றார்.

இவ் வைத்தியசாலையின் நீண்டநாள் குறைபாடுடைய இத் தேவையானது, நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் அமைச்சரிடம் முன்வைத்த வேண்டுகோளிற்கிணங்க நடப்பாண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து மூன்று இலட்சம் ரூபாபெறுமதியில் சுகாதார அமைச்சினூடாக இக் கட்டடம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த வியாழக்கிழமை மு.ப 9.30மணிக்கு மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையின் வளாகத்தில் நோயாளர் நலன்புரிச் சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பொது Dr.காந்தநேசன், நோயாளர் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Leave a comment