நாட்டில் இன நல்லிணக்கம், அமைதி, ஒற்றுமை, அபிவிருத்தி ஏற்பட எமக்கு மத்தியில் உள்ள வேற்றுமைகளையும் கருத்து முரண்பாடுகளையும் மறந்து ஒன்றுபடுவோம் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, “பாலஸ்தீன், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்கின்ற சகோதர முஸ்லிம்களின் துன்பங்கள் நீங்கி அமைதியாகவும் – சுதந்திரமாகவும் வாழ இத்திரு நாளில் பிராத்தனை செய்வோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில், “புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்கள். ஈத் முபாறக்! ஒரு மாத காலம் பசித்திருந்து, மனோ இச்சைகளை கட்டுப்படுத்தி, நல்ல அமல்களை செய்தோம். இந்த பயிற்சி மூலம் பெற்றுக்கொண்ட அனுபங்கள் – நன்மைகளை வாழ்வில் நடைமுறைப்படுத்த இத்திரு நாளில் உறுதி பூணுவோம்.
உள்நாட்டிலும் – சர்வதேசத்திலும் முஸ்லிம்கள் பல்வேறு சவால்களையும் – பிரச்சினைகளையும் எதிர்நோக்கியுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு சக்திகள் இயங்கி வருகின்ற நிலையில் நாங்கள் மிகவும் கவனமாகவும் – சமயோசிதமாகவும் செயற்பட வேண்டியுள்ளது. சிரியாவிலும், பாலஸ்தீனத்திலும் கொத்துக் கொத்தாக அப்பாவி பொது மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். அம்மக்களுக்காக இத்திருநாளில் நாங்கள் விசேட துஆ பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும். அதேவேளை, உள்நாட்டில் எமக்கு எதிராக தீட்டப்படும் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டு நாட்டில் அமைதி, இன நல்லிணக்கம், ஒற்றுமை ஏற்படவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினைகளையும் – கருத்து முரண்பாடுகளையும் உண்டு பன்ன சிலர் முயற்சிக்கின்றனர். எவ்வாறான சூழ்நிலை வந்தாலும் நாங்கள் ஒற்றுமையாக இருப்போம் என இத்திருநாளில் உறுதிபூணுவோம் எனவும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.