முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள், தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் வடமாகாண சபையின் செயற்பாடுகளை கண்டித்தும் தமக்கு உரிய தீர்வு கோரியும் கடந்த 14 ஆம் திகதி முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மாவட்ட செயலகம் முன்பாக தமது பேருந்துகளை நிறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக தமது மாவட்டத்தில் உள்ள பேருந்துகள் மாதத்தில் 10, 12 நாட்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுவதாகவும் ஏனைய மாவட்ட பேருந்துகள் அனைத்து நாட்களும் சேவையில் ஈடுபடுவதாகவும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் தமது பிரச்சினைகளை கேட்டறிந்த பின்னர், வழித்தட அனுமதி வழங்குமாறு கோரிய போதும் எமது கோரிக்கையை மதிக்காது வடமாகாண போக்குவரத்து அதிகார சபையால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டததையும் தமது கோரிக்கைகளை தம்மோடு கலந்துரையாடி முடிவெடுக்குமாறுமே இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இருப்பினும் 14 ஆம் திகதி முல்லைத்தீவுக்கு வருகை தந்த வடமாகாண ஆளுநர், வடமாகாண போக்குவரத்து அதிகார சபை மற்றும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் இன்றி, தான் தீர்மானம் எடுக்க முடியாது என்றும் அவர்களை சந்தித்து இவை தொடர்பில் கலந்துரையாட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமது போராட்டத்துக்கான தீர்வு கிடைக்கும் வரை தாம் போராட போவதாகவும் தீர்வின்றேல் சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதிப்போம் எனவும் தெரிவித்த பேருந்து உரிமையாளர்கள், தொடர்ந்து இன்றும் 3 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை நேற்று (15) மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து, தமது போராட்டத்தை தொடர்ந்தனர்.
நேற்று மாலை இலங்கை தமிழரசு கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையிலான குழுவினர் இச்சம்பவம் தொடர்பில் முதலமைச்சருடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டிருந்தனர்.
முதலமைச்சர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வை வழங்க முடியாத நிலையில் திங்கட் கிழமை போக்குவரத்து அதிகார சபை மற்றும் பேருந்து உரிமையாளர்களது நிலைமைகளை அறிக்கையிட்டு, ஒரு தீர்வினை தருவதாக கலந்தரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.