மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 19 ஆயிரம் பேர் கைது

267 0

மலேசியாவில் கடந்த 5 மாதங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 19,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசிய அரசு வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் நடவடிக்கையில் கடந்த ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது. பதிவுச்செய்யப்படாத தொழிலாளர்கள் மீது பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன்படி கடந்த மார்ச் மாதம் 4,000 இந்தோனேசிய தொழிலாளர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள அருகாமை நாடுகளை குறி வைக்கும் மலேசிய நிறுவனங்கள், ஆட்கடத்தல்காரர்கள் வழியாக அப்பகுதிகளிலிருந்து ஆட்களை அழைத்து வருகின்றனர்.
இவர்கள் கட்டுமானத்துறை, தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்திற்கு ஆபத்தான கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். லாபத்தை மட்டுமே மையமாகக் கொண்ட நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துபவர்கள் இவர்களை எந்தவித ஆவணங்களுமின்றி பணியில் வைத்துள்ளனர்.
இந்நிலையில், சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 19,000 பேர் கடந்த 5 மாதங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய குடிவரவுத்துறையின் இயக்குனர் ஜெனரல் தடுக் செரி முஸ்தபர் அலி தெரிவித்துள்ளார். முறையான பயண ஆவணங்கள் இல்லாதவர்கள், சுற்றுலா மற்றும் மாணவர் விசாவில் வந்து வேலை செய்து கொண்டிருந்தவர்கள் என பலர் கைதாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பலர் மசாஜ் மையங்களில், விபச்சார விடுதிகளிலிருந்து கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Leave a comment