அரசை எதிர்ப்பதா? இல்லையா? இறுதி முடிவு விரைவில்-மாவை

429 0

அரசோடு ஒத்துப்போவதா? இல்லை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதா என்பது குறித்து , தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனான சந்திப்பு என்பவற்றின் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் “ என தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

“ இந்த அரசு வந்த பின்னர் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்கள் நிகழ்ந்த போதும், தற்போது தமிழ் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்கின்றது. குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஓரளவு சுமுகமான தீர்வினைத் தருமென்று நம்பப்பட்ட புதிய அரசியலமைப்பை அப்படியே கிடப்பில் போட்டு விட்டு ஆட்சியைத் தக்கவைக்கவே அரசு முனைகின்றது. எமது பொறுமைக்கும் ஒரு அளவுண்டு. அரசோடு முரண்படாமல், புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுதற்குரிய சூழலை நாம் ஏற்படுத்திக் கொடுத்திருந்தோம். ஆனால் அதனை அரசு சரிவரப் பட்யன்படுத்தவில்லை. அதிலும் தற்போது சுதந்திரக்கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான முரண்பாட்டால் அரசு ஆட்டம் கண்டுள்ளது. எனவே ஆட்சியைத் தொடர முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியின் எதிர்ப்பைச் சம்பாதிக்காதிருக்காதிருக்க , புதிய அரசியலமைப்பைக் கைவிடலாம் எனக் கூறப்படுகின்றது. அப்படி ஒரு நிலை ஏற்படுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பார்த்துக் கொண்டிருக்காது.

அரசோடு நல்லிணக்க விடயத்தில் ஒத்துப் போகும் படியும், அதற்கு மாறாக அரசு நடந்து கொண்டால், தமிழர்களின் உரிமைகளை அடையத் துணை நிற்பதாகவும் சர்வதேச நாடுகள் எமக்கு உறுதிமொழி அளித்துள்ளன. எனவே சர்வதேச ஆதரவோடு எமது பலத்தை வெளிப்படுத்த முனைவோம். எனினும் இது குறித்த இறுதிமுடிவை உடனடியாக எடுக்க முடியாது. எனவே தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம், பங்காளிக் கட்சிகளுடனான சந்திப்பு என்பவற்றின் பின்னரே இறுதி முடிவை எடுப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment