சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏற்பாட்டின் பேரில், 10 ஆண்டுகளுக்கு பிறகு தாத்தா-பாட்டி இருவரும் தங்கள் பேரனை சந்தித்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்து உள்ளது.
சென்னையை அடுத்த சிட்லபாக்கத்தைச் சேர்ந்தவர் சத்யசீலன் (வயது 72). இவருடைய மகனுக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தனர். இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
அதன்பிறகு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து சென்று விட்டனர். பின்னர் அந்த பெண், தனது குழந்தையுடன் அமெரிக்கா சென்று விட்டார். சத்யசீலனின் மகன், வெளியூரில் வேலை செய்து வருகிறார்.
சத்யசீலன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் தங்கள் பேரன் பிறந்த போது பார்த்தனர். ஆனால் அதன்பிறகு மகனை விட்டு பேரனுடன் மருமகள் பிரிந்து சென்று விட்டதால் அவர்களால் பேரனை பார்க்க முடியவில்லை.
அமெரிக்காவில் இருந்து பேரனுடன் மருமகள் சென்னை வரும்போதெல்லாம் எப்படியாவது தங்கள் பேரனை பார்த்து விடவேண்டும் என தவமாய் காத்து இருந்தனர். ஆனால் 10 ஆண்டுகள் ஆகியும் அவர்களால் பேரனை மட்டும் சந்திக்கவே முடியவில்லை.
வயதாகி விட்டதால் பேரனை பார்க்காமல் இறந்து விடுவோமோ? என்ற ஏக்கம் வயதான தாத்தா-பாட்டிக்கு ஏற்பட்டது. தினமும் பேரனை நினைத்து ஏங்கியபடி வாழ்க்கையை தள்ளி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பேரனுடன் மருமகள் சென்னை வந்து இருக்கும் தகவல் சத்யசீலனுக்கு கிடைத்தது. இந்தமுறை எப்படியாவது பேரனை சந்திக்க முடிவு செய்த அவர், தனது மனைவியுடன் மருமகள் வீட்டுக்கு சென்றார். ஆனால் அவர்களால் பேரனை பார்க்க முடியவில்லை.
பேரன் தங்கி உள்ள வீட்டின் எதிரே ஒரு நாள் முழுவதும் தாத்தா-பாட்டி இருவரும் பேரன் தங்கள் கண்ணில் பட்டுவிடமாட்டானா? என்று ஏங்கியபடி கொளுத்தும் வெயிலில் உணவு, தண்ணீர்கூட அருந்தாமல் காத்து இருந்தும் பலன் இல்லை.
இதையடுத்து சத்யசீலன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து நடந்த விவரங்களை தெரிவித்தார். நானும், எனது மனைவியும் கண் மூடுவதற்குள் ஒரு முறையாவது எங்கள் பேரனை எட்டி நின்றாவது பார்த்து விட்டு சென்று விடுகிறோம். எங்களுக்கு இந்த உதவியை செய்யுங்கள் என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.
வயதான தம்பதியினரின் வேதனையை பார்த்து மனம் உருகிய மாநகர கமிஷனர், இதுபற்றி பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமியிடம் தகவல் தெரிவித்து மனிதாபிமான அடிப்படையில் தாத்தா-பாட்டி இருவரும் அவர்களின் பேரனை சந்திக்க வைக்க முடியுமா? என்று முயற்சி செய்து பாருங்கள் என்று தெரிவித்தார்.
இதையடுத்து துணை கமிஷனர் மற்றும் சிட்லபாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இதுபற்றி சத்யசீலனின் மருமகளை சந்தித்து பேசினர். ஆனால் அவர், தனது மகனை காட்ட மறுத்தார். பின்னர் போலீசார், வயதான தம்பதிகள் கடைசி காலத்தில் பேரனை பார்க்க ஏங்கி தவிக்கின்றனர். ஒரே ஒரு முறை போலீஸ் நிலையம் அழைத்து வந்து அவர்களுக்கு காட்டி விட்டு, உங்கள் மகனை கையோடு அழைத்துச்செல்லுங்கள் என்று தெரிவித்தனர்.
நீண்ட நேர யோசனைக்கு பிறகு அவர் சம்மதம் தெரிவித்தார். பின்னர் தனது மகனை அழைத்துக்கொண்டு போலீஸ் நிலையம் வந்தார். அங்கு பேரனுக்காக காத்திருந்த தாத்தா-பாட்டி இருவரும் பேரனை பார்த்ததும், ஓடோடி வந்து அவனை கட்டி அணைத்து, முத்த மழை பொழிந்தனர்.
10 ஆண்டுகளாக காத்திருந்த தங்கள் பேரனை நேரில் பார்த்ததில் ஆனந்த கண்ணீரும் வடித்தனர். இந்த சம்பவம் அங்கிருந்த போலீசாரை நெகிழச்செய்தது.
குழந்தையாக இருக்கும்போதே தாய்-தந்தை பிரிந்து சென்று விட்டதால் அவரது பேரனுக்கு தனது தாத்தா-பாட்டியை அடையாளம் தெரியவில்லை. எதுவும் பேசாமல் தலை குனிந்தபடியே அமர்ந்து இருந்தான்.
தாத்தா-பாட்டி இருவரும் எதிரே மவுனமாக அமர்ந்து இருந்த தங்கள் பேரனை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி இருந்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு பேரனை அழைத்துக்கொண்டு மருமகள் அங்கிருந்து சென்று விட்டார்.
பேரனை பார்க்காமல் தவித்து வந்த தங்களுக்கு பேரனை பார்க்க ஏற்பாடு செய்த மாநகர போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் மற்றும் போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த சத்யசீலன், “நானும், எனது மனைவியும் இறப்பதற்கு முன்பாக ஒரு முறையாவது பேரனை பார்க்க ஆசைப்பட்டோம். அவனை பார்க்காமல் கண்முடிவிடுவோமோ என்று நினைத்தோம். ஆனால் இப்போது எங்கள் பேரனை பார்த்துவிட்டோம். இப்போதே நாங்கள் இறந்தால்கூட மனநிறைவுடன் இறப்போம்” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
இதனால் வேறு வார்த்தைகள் எதுவும் பேச முடியாமல் தவித்த போலீசார், தாத்தா-பாட்டி இருவரையும் சமாதானம் செய்து, ஆறுதல்படுத்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.