மலாலாவை சுட்ட தீவிரவாதி அமெரிக்க வான்வழித் தாக்குதலில் பலி

2971 0

பாகிஸ்தான் தலிபான் தலைவர் முல்லா பசுலுல்லா ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. பாகிஸ்தான் எல்லையில் குனார் மகாணத்தில் நேற்று முன்தினம் அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின. அப்போது, டெஹ்ரிக் – இ- பாகிஸ்தான் அமைப்பின் தலைவர் பசுலுல்லா கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் பிரிவின் செய்தித்தொடர்பாளர் மார்ட்டின் ஓ டொனல் இதை உறுதிபடுத்தியுள்ளார். இந்த தகவலை அமெரிக்க அரசு ஊடகமான வாய்ஸ் ஆப் அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் சுவாத் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர் பசுலுல்லா. அங்கு தலிபான்களுக்கு ஆதரவாக வானொலி நிலையம் ஒன்றை தொடங்கிய அவர், தீவிரவாத ஆதரவு கருத்துக்களை இளைஞர்களிடம் அதன் மூலம் பரப்பி வந்துள்ளார்.

பாகிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடி வரும் மலாலாவும் இதே பகுதியைச் சேர்ந்தவர். 2012-ம் ஆண்டில் 15 வயதாக இருந்த மலாலா மீது பசுலுல்லா தாக்குதல் நடத்தினார்.

மலாலா சென்ற பள்ளி பேருந்தை தடுத்து நிறுத்திய பசுலுல்லா அவரது தலையை குறி வைத்து சுட்டார். இதில் பலத்த காயமடைந்த மலாலா நீண்ட போராட்டத்திற்கு பின் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். மலாலாவுக்கு 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பசுலுல்லா கொல்லப்பட்டதாக செய்தி வருவது இது முதல்முறை அல்ல. 2010-ம் ஆண்டும் அமெரிக்கப்படைகள் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. எனினும் பின்னர் அது தவறான தகவல் என தெரிய வந்தது. இதுபோல அவர் உயிரிழந்ததாக நான்கு முறை தகவல் வெளியானது.

Leave a comment