பொதுபல சேனாவின் ஞானசார தேரரிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையை இலங்கையின் மனித உரிமையை மதிப்பவர்களுக்கு கிடைத்த வெற்றி என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியாவை மிரட்டிய குற்றத்திற்காக பொதுபலசேனாவின் ஞானசார தேரரிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரதி தலைவர் ஓமர் வரைச் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது இலங்கையில் மனித உரிமையை பாதுகாப்பதற்காக போராடும் அனைவருக்கும் கிடைத்த முக்கியமான வெற்றியாகும்.
நீதிகோருபவர்களை மிரட்டி மௌனியாக்க நினைப்பவர்களிற்கு தெளிவான செய்தியொன்றை இந்த தீர்ப்பின் மூலம் நீதித்துறை தெரிவித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையினால் குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமைகளை உலகெங்கும் வலியுறுத்தவும் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒர் இலாப நோக்கற்ற அமைப்பே சர்வதேச மன்னிப்பு சபை அல்லது பன்னாட்டு மன்னிப்பு அவை (Amnesty International) ஆகும். இவ்வமைப்பானது ஐக்கிய இராச்சியத்தில் 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.