இலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம்
அன்பார்ந்த மக்களே!
தமிழீழ தேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனித நேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத்தப்பட்டது. நிதிமோசடி, பயமுறுத்திப் பணம் சேகரித்தல், பணச்சுத்திகரிப்பு, தவறான ஆவணங்கள் உபயோகித்தமை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் குற்றவியல் அமைப்பாகவும் அவ் அமைப்பிற்காக செயற்பட்டமை போன்றன குற்றச்சாட்டுக்களாக முன்வைக்கப்பட்டு நடைபெற்றன. மேற்படி வழக்கானது 2018 சனவரி 8ம் நாள்முதல் நடைபெற்று 14.06.2018 வியாழக்கிழமை சுவிற்சர்லாந்து திச்சினோ மாநிலத்தின் பெலின்சோனா நகரில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் வழங்கப்பெற்றது.
தரணியெங்கும் தன்னிகரில்லாத அர்ப்பணிப்பு நிறைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான, தமிழர்களை மிகவும் கவலையில் ஆழ்த்திய குற்றச்சாட்டான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு என்பதற்கான எவ்வித முகாந்தரமும் இல்லை என்பதை எடுத்துரைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்ட குற்றவியல் செயலில் ஈடுபட்டதிற்கான ஆதாரங்கள் எவையும் நிரூபனம் ஆகவில்லை என்பதையும் ஆணித்தரமாக எடுத்துரைத்த மன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல என தீர்ப்பளித்துள்ளது.
அத்தோடு, விடுதலைப் புலிகள் அமைப்பானது தமிழ் மக்களுக்கான கட்டுக்கோப்பான இராணுவக் கட்டமைப்புக்களுடன் அனைத்துலக நாடுகள் பலவற்றுடனும் தொடர்புகளைக் கொண்டிருந்த அரசியற்றுறையையும் தன்னகத்தே கொண்டிருந்தது. தம்மை ஒரு விடுதலை இராணுவ அமைப்பாகவே வரையறுத்துக் கொண்டிருந்தனர் என்கின்ற நீதிமன்றின் செய்தியும் எமது போராட்டத்திற்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றியாகும்.
உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சுவிஸ் கிளையின் மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சுமத்தப்பெற்ற பணச் சுத்திகரிப்பு, அச்சுறுத்தி நிதி சேகரித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததோடு குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்துத் தீர்ப்பளித்துள்ளது. அதேவேளை, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நிதிப் பலத்தை அதிகரிக்கும் நோக்கோடு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர்களும், வங்கி முகவர்களும் இணைந்து சட்டத்திற்குப் புறம்பான முறையில் வங்கிக்கடன் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் விதிமீறல்கள் நடைபெற்றதாகக் கூறி, அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பெற்ற 20-24 மாதங்கள் தண்டனையும், அபராதமும் வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
இன்றைய நாளில் வழங்கப்பெற்ற இத் தீர்ப்பானது, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களால் ஆரம்பிக்கப்பெற்று, பல்லாயிரம் மாவீரர்களின் அர்ப்பணிப்பால் கட்டியெழுப்பப்பெற்ற எமது விடுதலைப் போராட்டம் நீதியானது என்ற உண்மையை சர்வதேச மன்றில் கோடிட்டுக் காட்டியுள்ளது.
இந்த வழக்கு தொடரப்பெற்ற நாள்முதல் எமது நியாயத்தன்மையையும், எமது மக்களினதும் எமது செயற்பாட்டாளர்களினதும் மனித நேயச்செயற்பாடுகளையும் நிலைநிறுத்த கடுமையாக உழைத்த சட்டத்தரணிகள், ஆதரவாளர்கள், இன உணர்வாளர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். கடினமான சுமைகளுக்குள் நின்ற போதும், இலட்சிய உறுதி தளராது தொடர்ந்தும் சுவிஸ் நாட்டின் சட்ட ஒழுங்குகளை மதித்து எமது தாயகத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க தமிழ்மக்கள் அனைவரும் அணிதிரளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’
சுவிஸ் கிளை
தமிழீழ விடுதலைப் புலிகள்