டெல்லி கவர்னர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை சந்திக்க அவர்களது குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக டெல்லி முதல்வரின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடந்த 4 மாதங்களாக பகுதி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மந்திரிகளை அதிகாரிகள் சந்திக்க மறுப்பதாகவும், இதனால் அரசின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும் துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை கேட்டுக் கொண்டார். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்ந்து மந்திரிகளை புறக்கணிக்கின்றனர்.
இந்த நிலையில் துணை நிலை கவர்னர் பைஜாலை கடந்த 11-ந் தேதி மாலை கெஜ்ரிவால் சந்தித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தர விடுமாறும், ரேசன் பொருட்களை வீடுகளுக்கு சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரினார்.
பின்னர் கவர்னர் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அவருடன் துணை முதல்-மந்திரி மனிஷ் சிகோடியா, மந்திரிகள் கோயல்ராய், சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
நேற்று 4-வது நாளாக தொடர்ந்து கெஜ்ரிவாலும், அவருடன் இருக்கும் 3 மந்திரிகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே தர்ணாவில் ஈடுபட்டுள்ளவர்களை சந்திக்க அவர்களது குடும்பத்தினர் நேற்று டெல்லி கவர்னர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நீண்ட நேரம் காத்திருந்த அவர்கள் வேறு வழியின்றி தர்ணாவில் ஈடுபட்டுள்ளவர்களை சந்திக்காமலேயே வீடு திரும்பினர். இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இந்த சம்பவம் குறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில், மதிப்பிற்குரிய துணை நிலை ஆளுநர் அவர்களே, முதல்வரின் தாயார் மற்றும் மனைவி, துணை முதல்வரின் மனைவி, சத்யேந்தர் ஜெயினின் மனைவி உள்ளிட்ட நாங்கள் நான்கு பெண்களும் உங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிக்கும் விதத்தில் இருப்பதால் உங்கள் வீடு அமைந்திருக்கும் சாலைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறதா? தயவுசெய்து தலையிடுங்கள். தயவுசெய்து அனைவரை கண்டும் அஞ்சாதீர்கள், என கூறியிருந்தார்.
மற்றொரு பதிவில், துணை நிலை ஆளுநர் அவர்களே, நாங்கள் நீண்ட காலமாக காத்திருந்தோம், ஆனால் எங்கள் குடும்பத்தை சந்திக்க எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கைதிகள் கூட தங்கள் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர், என கூறியுள்ளார்.