சரக்கு கப்பலில் திடீர் தீ விபத்து – 22 ஊழியர்கள் பத்திரமாக மீட்பு

298 0

ஹால்டியா துறைமுகம் அருகே சரக்கு கப்பலில் நிகழ்ந்த தீ விபத்து காரணமாக கப்பலில் இருந்த மாலுமி உள்பட 22 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

மேற்கு வங்காள மாநிலம் ஹால்டியா துறைமுகம் அருகே வங்கக்கடலில் ‘எம்.வி. எஸ்.எஸ்.எல். கொல்கத்தா’ என்ற சரக்கு கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த கப்பலில் நேற்று முன்தினம் இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கப்பலில் இருந்த ஊழியர்கள், கடற்படை அதிகாரிகளிடம் உதவி கேட்டனர். இதையடுத்து கடற்படை கப்பல் மற்றும் சரக்கு விமானத்தில் வீரர்கள் சரக்கு கப்பல் இருந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். பலத்த காற்று மற்றும் மோசமான தட்பவெப்பநிலை காரணமாக மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.

எனினும் அந்த கப்பலில் இருந்த மாலுமி உள்பட 22 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அந்த கப்பலில் பிடித்த தீயை அணைக்கும் பணி நடந்தது.

Leave a comment