அமெரிக்க டொலரின் பெறுமானம் அதிகரித்து கொண்டே செல்வதனால் நாட்டில் இன்று ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் நாட்டுக்கு 753.8 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையினால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றதிலிருந்து ரூபாவின் பெறுமானத்தை தக்கவைத்துக்கொள்ள முடியாது போயுள்ளது. அதனால் டொலரின் பெறுமானம் உயர்வடைந்துகொண்டே செல்கிறது. இதனால் இன்று நாட்டுக்கு 753.8 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே இவ்வாறு ஏற்படும் நஷ்டங்களை ஈடுசெய்வதற்காக மக்கள் மீது வரிச்சுமை அதிகரிக்கப்படுகிறது. அரசாங்கத்திடம் ஒழுங்கமைப்பட்ட பொருளாதாரக் கொள்கை இல்லாததனாலேயே இவ்வாறு வரிச்சுமையை அதிகரிக்கின்றனர்.
நாட்டில் இன்று மீண்டும் பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆட்சியில் ஒழிக்கப்பட்ட பாதாள உலக்குழுக்களை நல்லாட்சி அரசாங்கமே மீண்டும் நாட்டுக்கு இறக்குமதி செய்துள்ளது. எனவே அக்குழுக்களின் செயற்பாடுகளுக்கு அரசாங்கமே அனுசரணை வழங்கி வருகின்றது என்றார்.