ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணி உறுப்பினர்களின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 40 ஆண்டுகால அரசியல்வாதியாகவும் 17 ஆண்டுகள் கட்சியின் பொதுச் செயலாளராகவும் செயற்பட்டு வந்த மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக களமிறங்கி கட்சியை வீழ்த்துவார் என எவரும் எதிர்பார்க்கவில்லை.
எனினும் எதிர்பாராத நேரத்தில் அது நடந்தது. அதேபோல் இன்று வலது பக்கம் பயணிக்கும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன எதிர்பாராத நேரத்தில் இடதுபக்கம் சமிக்ஞை காட்டுவார் என்பதையும் எதிர்பார்க்கலாம். தேசிய அரசாங்கத்தில் அவர் இருந்தாலும் மீண்டும் சுதந்திர கட்சியை பலப்படுத்த மஹிந்த ராஜபக்ஷவுடன் கைகோப்பார் என்ற நம்பிக்கையும் எமக்கு உள்ளது.
வடகொரிய தலைவர் கிம் யொங் உன்னும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இணைவார்கள் என்பதை யார் எதிர்பார்த்தது, ஆனால் அவர்கள் இணைந்து இன்று உலகையே வியக்க வைத்தனர். அதேபோல் ஜனாதிபதி மைத்திரியும் மஹிந்தவும் விரைவில் இணைவார்கள்.
ஆகவே மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினது ஆதரவில் மீண்டும் எமது ஆட்சியை ஆரம்பிப்போம் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க வேண்டுமாயின் அதற்கு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவின் ஆதரவு அவசியமானது. அவரால் மட்டுமே மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க முடியும். ஆகவே மைத்திரபால சிறிசேனவின் ஆதரவுடன் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் மீண்டும் எமது ஆட்சி ஆரம்பிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.