ஸ்ரொக்கொல்ம் சின்ட்ரோம் (Stockholm Syndrome) எனப்படும் சம்பவம் ஒரு உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு அனுதாபச் சம்பவமாகும். 1973ம் ஆண்டு ஸ்வீடன் தலைநகர் ஸ்டொக்கொல்மில் அமைந்துள்ள வங்கியொன்றில் இரண்டு கொள்ளையர்கள் அதிரடியாக நடாத்திய கொள்ளைச்சம்பவத்தின் போது பணயக்கைதிகளாக பொதுமக்களைப் பிடித்து வைத்தனர். கிட்டத்தட்ட ஆறுநாட்கள் நடைபெற்ற இப்பணயக்கைதிகள் சம்பவத்தை முடிவிற்குக் கொண்டுவந்த காவல்துறையினர் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டெடுத்தனர்.
இங்கு நடந்த ஆச்சரியமான விடயம் என்னவெனில் மீட்டெடுக்கப்பட்ட எவருமே கொள்ளையர்களுக்கு எதிராகச் சாட்சி சொல்ல முன்வரவில்லை. மாறாக கொள்ளையர்களைச் சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இதற்கான காரணம் என்னவென ஆராய்ந்தபோதுதான் ஒர் உண்மை தெரியவந்தது. உளவியல் ரீதியாக ஏற்பட்ட மனமாற்றத்தின் தாக்கமே இதற்குக் காரணம் என்றும் துப்பாக்கி முனையில் பணயக்கைதிகளாக ஆக்கப்பட்டவர்களைப் பொறுத்தவரை எதிரியிடம் மண்டியிட்டாலும் பரவாயில்லை சாவிலிருந்து பிழைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தின் பிரதிபலிப்பாகவும் தாம் உயிர் பிழைத்துவிட்டால் தமக்கு மறுவாழ்வு கிடைத்ததாகவே உணர்ந்து மகிழ்வார்கள் என ஆய்வில் கண்டுபிடித்தனர். இந்த உளவியல் தாக்கம் உண்டாவதற்கு நான்கு காரணங்களைப் பாதிக்கப்பட்டவர்கள் உணர்ந்திருப்பார்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
1.தமது உயிரிற்கும், உறவுகளிற்கும், உடமைகளிற்கும் உள்ள அச்சுறுத்தலை உணர்வார்கள்.
2.துன்பத்தை தருபவர்களே சிறிய சிறிய இரக்கங்களை அங்காங்கு காட்டுவதை உணர்வார்கள்.
3 தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதை உணர்வார்கள்.
4.எங்கும் தப்பியோ ஒளிந்தோ வாழ முடியாதென்பதை உணர்வார்கள்.
இந்த உணர்வின் பிரதிபலிப்பே சிறைப்பிடித்தவனுக்கு பாதிக்கப்பட்டவர்கள் விசுவாசமாக மாறுவதற்கான காரணங்கள். இந்த உண்மைச் சம்பவம் தான் ‘ஸ்ரொகொல்ம் சின்ட்ரோம்’ என்ற குறியீட்டுப் பெயருடன் பேசப்படுகின்றது.
(feelings of trust or affection felt in many cases of kidnapping or hostage-taking by a victim towards a captor)
இந்த உணர்வில் தான் பாதிக்கப்பட்ட விசுவமடு மக்களின் வாழ்க்கையும் இருப்பதை வெளியில் இருப்பவர்களால் அவதானிக்க முடியும். விசுவமடு மக்களும் ஸ்ரொக்கொல்மில் பாதிக்கப்பட்ட மக்களைப்போல் தமது நிலமையை மறுதலிப்பார்கள். இதை விசுவமடு சின்ட்ரோம் (Visuvamadu Syndrome) என்றும் சொல்லலாம். விசுவமடு மக்களுக்கும் அவர்களைப்போன்ற ஆக்கிரமிப்பாளர்களின் சுற்றாடலில் வாழும் மக்களுக்கும் இன்று தேவையானது எல்லா வகையான எமது அன்பும் ஆதரவும் என்றால் அது மிகையாகாது.
விசுவமடு மக்களும் நுண்ணரசியல் (Micro Politics) வியூகத்தின் ஊடாக சிறிலங்கா இரணுவத்தினரின் நயவஞ்சக அன்புப் பிடிக்குள் சிக்கி உளவியல் ரீதியாக மாற்றமடைந்துள்ளனர் என்றும் கூறலாம். விசுவமடு இராணுவ அதிகாரியின் இடமாற்றத்தின் போது மக்களிடம் இருந்து ஏற்பட்ட தாக்கம் என்பது அந்த மக்களின் உயிர்காத்த நன்றிக் கடனாகவே பார்க்க வேண்டிய சம்பவம் ஆகும். வீட்டிற்கு வீடு படலைக்குப் படலை சென்று முதலில் 20 பேரைச் சேர்த்து ஆரம்பித்த இந்த உயவியல் போர்த் தந்திரத்தில் 3500 பேர் வரை பணயக்கைதிகளாக இந்த இரைணுவத் தளபதி சேர்த்து வெற்றி கண்டுள்ளார்.
சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்ட இனவழிப்பு அரசியலின் நயவஞ்சகச் சூழ்ச்சி நாடகத்தின் ஒர் அங்கமே கேர்ணல் பந்து இரத்னப்பிரியவின் பிரியாவிடை நாடகம். சர்வதேச அளவில் சிறிலங்கா அரசிற்குக் கிடைத்த ஒரு நன்மதிப்பாகவே இச்சம்பவம் அமைந்துள்ளது. சொகுசு வாகனங்களில் உலாவந்துகொண்டும் மாடமாளிகைகளில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டும் குடைபிடிப்பதற்கு சேவகர்களை வைத்துக்கொண்டு பந்தோபஸ்துடன் பவனிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெட்கித் தலைகுனியவேண்டும்.
போரால் மிகவும் பாதிக்கப்பட்டு குருடாகி, செவிடாகி, கையிழந்து, காலிழந்து, வலுவிழந்து வாழ்வில் நம்பிக்கையிழந்து நின்றோரை நாதியற்று நிற்கவிட்ட தமிழ் அரசியல்வாதிகள் தான் இதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும். 3500 ற்கு மேற்பட்டோருக்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினூடாக (civil security department(CSD) அரச வேலைவாய்ப்பை ஒர் இராணுவ அதிகாரியால் பெற்றுக்கொடுக்க முடிந்ததென்றால் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் அரசியல்வாதிகளால் ஏன் இதைச் செய்ய முடியவில்லை.
இனவழிப்பு சிங்கள அரசின் நெறிப்படுத்தலுடன் தமிழ்மக்களை அடிமைப்படுத்தும் தந்திரோபாயமாக முன்பள்ளிகளிலும் பண்ணைகளிலும் வன்னி மக்களையும் போராளிக் குடும்பங்களையும் கவர்ச்சிகரமான சம்பளத்துடன் வேலைக்கமர்த்தி மெதுமெதுவாக தமிழ்மக்களின் மனதைக் கவர்ந்துகொண்டு மறுபுறத்தில் சிங்களம் தனது இனவழிப்பு முன்னெடுப்புக்களைத் தொடர்கின்றது. இந்தப் பூடகமான நடவடிக்கைகள் அப்பாவிப் பாமரமக்களால் விளங்கிக்கொள்ள முடியாது. இங்கு மக்களைக் குற்றம்சாட்ட நாம் முற்படவில்லை மாறாக மக்களை இந்நிலைக்கு இட்டுச்சென்ற தமிழ் அரசியல்வாதிகளுக்கு அனைத்துலக ஈழத்தமிழர் அவை சார்பாகக் கடுங்கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
‘ஸ்ரொகொல்ம் சின்ட்ரோம்’ அனுபவத்தின்படி பார்த்தால் பணயக்கைதிகள் எப்படித் தன்னைச் சிறைப்பிடித்தவனிடத்தில் தனது உணர்வுகளை நேர் திசையாக வளர்த்துக்கொண்டார்களோ அதேபோன்ற ஒரு உளவியல் தாக்கம் தான் எம்மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது என்று கூறலாம். ஆக்கிரமிப்பாளர்களின் போலி மனிதாபிமானத்தில் மக்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாறினால், தமிழர் தேசம் கொஞ்சம் கொஞ்சமாக அழிவது திண்ணம்.
இந்தப் பாதகமான வளர்ச்சியை உணர்ந்துகொண்டு தமிழ்த் தேசியத்திற்காக தாயகத்திலும் புலத்திலும் தமிழகத்திலும் மற்றும் உலகெங்கிலும் வாழும் அனைத்துத் தமிழ் உறவுகள், செயற்பாட்டாளர்கள், அமைப்புகள் ஒன்றிணைந்து அடக்குமுறையாளர்களையும் ஆக்கிரமிப்பாளர்களையும் தமிழர் தாயகப்பிரதேசங்களில் இருந்து அகற்றி எமது மக்களை ஒரு தேசமாக உணரவைக்கும் புரட்சிகர சிந்தiனையை ஊட்ட ஒன்றிணைய வேண்டும் என அனைத்துலக ஈழத்தமிழர் அவை சார்பாக வேண்டி நிற்கின்றோம்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-