கூட்டுறவுத்துறையின் அங்கத்தவர்களாக இருந்து தமது பணியின் போது மரணமடைந்த குடும்பஉறுப்பினர்களுக்கான கொடுப்பணவுகள் வழங்கும் நிகழ்வில் வடமாகாண மகளிர்விவகாரம், கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் கலந்து கொண்டு பணியின் போது மரணமடைந்த அங்கத்தவர்களுக்கானஇழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகளை குறித்தஅங்கத்தவர்களின் குடும்பத்தினரிடம் கையளித்தார்.
குருநகர் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினை சேர்ந்த எமிலியான் சியாங் என்பவருக்கான இழப்பீட்டுத் தொகையை சியாங் பெல்சியானாவும், ஏழுகடல் மீனவர் கூட்டுறவுச் சங்கத்தை சேர்ந்த யோகராசாகிசாந்தன் என்பவருக்கான இழப்பீட்டுத் தொகையை காயாம்புயோகராசாவும், வங்காலை புனித அந்தோணியார் மீனவர் கூட்டுறவுச் சங்கத்தை சேர்ந்த சென்யோன் குணசீலன் குரூஸ் என்பவருக்கான இழப்பீட்டுத் தொகையை குணசீலன் மிராண்டாவும், கொடிகாமம் பனைதென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தினைச் சேர்ந்தசின்னவன் கனகரத்தினம் என்பவருக்கான இழப்பீட்டுத் தொகையை கனகரத்தினம் விஐயலட்சுமியும் அமைச்சரிடமிருந்து இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை பெற்றுக்கொண்டனர்.
இழப்பீட்டுத் தொகையை வழங்கி வைத்த அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், குடும்ப உறவுகளை இழந்து நிர்க்கதியாக நிற்கின்ற குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இப் பணமானது சிறியதாக இருந்தாலும், குடும்பஅங்கத்தவர்களின் நலன்களை ஈடுசெய்ய ஓரளவு உதவக்கூடியதாக இருக்கும். ஆனாலும் அவர்களின் இழப்பினை அமைதிப்படுத்தவோ, சாந்தப்படுத்தவோ முடியாது. இவ் உதவுதொகையை பயன்படுத்தி உங்கள் பிள்ளைகளை நன்றாக வளர்த்தெடுக்கவேண்டும். முன்னாள் கூட்டுறவுஅமைச்சரினால் அறிமுகப்படுத்தப்பட்ட இத் திட்டமானது எதிர்காலங்களில் இத் தொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொ.வாகீசன் தலைமையில் 13.06.2018புதன்கிழமைமு.ப 10.00மணிக்கு மகளிர் விவகார அமைச்சரின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் இ.கிருஸ்ணபிள்ளை, கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் தலைமைப்பீட உத்தியோகத்தர் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர், பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.