இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டிருக்கின்றார். இந்து விவகார பிரதி அமைச்சை முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்பட்டமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் எதிர்க்கும். அதில் மாற்றம் செய்யாவிடின் அரசாங்கம் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்தார்.
இந்து சமய விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்து சமய விவகாரத்துக்கு பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயமாக எதிர்க்கும். இந்து மதம் சார்ந்தவர்களுக்கு அந்த அமைச்சுப் பதவியை வழங்கியிருக்கலாம். முஸ்லிம் ஒருவருக்கு இந்து சமய பிரதி அமைச்சு வழங்கப்பட்டமை, இந்து மற்றும் முஸ்லிம் மக்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவறான முன்னுதாரணத்தை வழங்கியிருக்கின்றார்.இந்துமத விவகார பிரதி அமைச்சுப் பதவி காதர் மஸ்தானிடமிருந்து மீளப்பெறப்படவேண்டும். அதைச் செய்யாவிடின் நிச்சயம் நெருடிக்கடியை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் – என்றார்.