மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் இருப்பதில் பிரச்சினை இல்லையெனத் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், எனினும், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சில் இருந்து இந்து கலாசார அமைச்சை பிரித்தெடுத்து, அதை வேறு ஒரு பொருத்தமான அமைச்சுடன் இணைக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சில் இருந்து இந்து கலாசார பிரதியமைச்சராக, காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமைக்கு தொடர்ச்சியாக எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் மனோ இந்த விடயம் தொடர்பில் பேஸ்புக்கில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்தப் பதிவில் “மீன்வள துறை அமைச்சர், மீனவராகவும், கல்வி அமைச்சர், கல்வி பேராசிரியராகவும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், இதே விதி மத விவகார அமைச்சுகளுக்கு பொருந்தாது. இஸ்லாமிய மத விவகாரம், அமைச்சர் சுவாமிநாதனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், நான் அதை எதிர்த்து இருப்பேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மதம் என்பது ஒரு உணர்வுபூர்வமான விடயம். இதில் அரசியல் விளையாட்டு கூடாது. அவ்வந்த மத விவகாரங்கள் அவ்வந்த மதத்தை சேர்ந்தவர்களிடம் இருப்பதே பொருத்தமானது. குறிப்பிட்ட அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர், அந்த அமைச்சு கையாளும் மத ஸ்தலங்களுக்குள் செல்ல வேண்டும். மத தலைவர்களுடன் உரையாட வேண்டும். மத உணர்வுகளை, முழுமையாக புரிந்துக்கொள்ள வேண்டும்.” எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, “இன்று நிகழ்ந்திப்பது ஒரு குளறுபடி. எங்களை அவமானப்படுத்திக்கொள்ள இந்த அரசை நாம் உருவாக்க பங்களிக்கவில்லை. இந்து கலாசார அமைச்சு இதுவரை, டி.எம்.சுவாமிநாதனிடம் இருந்தது போதும். அதை பிரித்து எடுத்து வேறு ஒரு பொருத்தமான் அமைச்சுடன் சேர்த்து விடுங்கள். காதர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக இருக்கட்டும்.
இல்லாவிட்டால், இதை தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்தும் செயற்பாடாகவே நாம் கருதுவோம்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.