வலி.வடக்கு காணி விடுவிப்பு விவகாரம்! யாழ்.கட்டளைத்தளபதியின் கருத்திற்கு கடற்றொழில் சம்மேளனம் கடும் எதிர்ப்பு

499 0

dsc_0032வலி.வடக்கில் உள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்கப் போவதில்லை என்று யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி தெரிவித்துள்ள கருத்திற்கு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
மயிலிட்டி உள்ளிட்ட தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அம் மக்களிடத்திலேயே மீண்டும் கையளிக்க வேண்டும் என்றும் சம்மேளனம் கூட்டிக்காட்டியுள்ளது.
யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயம் கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
இலங்கை அரசாங்கம் தற்போது முன்னெடுத்துவரும் நல்லிணக்கச் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கதாக இருக்கின்ற போதிலும் அதன் சில செயற்பாடுகள் அவ நம்பிக்கையை ஏற்படுத்துவனதாக உள்ளன.
குறிப்பாக யாழ்.மாவட்ட படைததளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க வெளியிட்டுள்ள கூற்று எம்மை கவலையடைய வைத்துள்ளது.
யாழ்.மாவட்டத்தில் உள்ள படையினர் வசமுள்ள 4 ஆயிரத்து 419 ஏக்கரில் ஒரு அங்குலத்தை கூட விடுவிக்க முடியாது என இராணுவ தளபதி வெளியிட்டுள்ள கருத்து நல்லிணக்க செயற்பாடுககளுக்கு குந்தகம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்த காணிகளில் மயிலிட்டி துறைமுகம் உட்பட, தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் பிரதேசங்கள் என பல அடங்கியுள்ளது. எனவே இந்த பிரதேசங்களை விடுவிப்பதன் மூலமே நல்லிணக்கம் சாத்தியமாகும். அரசாங்கம் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மாற்றுக் காணிகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விட முடியுமே தவிர படையினர் அந்த கோரிக்கையினை விட முடியாது.
தாங்கள் எங்கே குடியிருக்க வேண்டும் என்பதை அந்த நிலத்தில் வாழவேண்டிய மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.