தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை – பெரியாறு, வைகை அணைகள் நீர் மட்டம் உயர்வு

330 0

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பெரியாறு, வைகை அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. 

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. நேறறு முன்தினம் 121.40 அடியாக இருந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் நேற்று காலை 4 அடி வரை உயர்ந்து 125 அடியாக அதிகரித்தது.

நேற்று 9,479 கன அடியாக நீர் வரத்து இருந்த நிலையில் இன்று காலை 4,824 கன அடியாக குறைந்தது. இருந்தபோதும் அணையின் நீர் மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 126.10 அடியாக அதிகரித்துள்ளது.

பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 1400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் இருப்பு 3,856 மில்லியன் கன அடியாக உள்ளது. கடந்த 4 நாட்களில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 10 அடி வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு முறையாக தண்ணீர் திறக்கப்படாவிட்டாலும் அணையில் நீர் வரத்து அதிகரிப்பை கருத்தில் கொண்டு 1400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதனால் கம்பம், கூடலூர், சின்னமனூர் ஆகிய பகுதிகளில் உள்ள குளங்கள், கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. சின்னமனூர், பாலார்பட்டி, மார்க்கையன்கோட்டை ஆகிய பகுதிகளில் முதல் போகத்திற்கான நாற்றங்கால் நடவு பணி தொடங்கியுள்ளது.

பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாலும் வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியான மூல வைகை ஆறு, வரு‌ஷநாடு ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருவதாலும் வைகை அணை நீர் மட்டம் 37.57 அடியாக அதிகரித்துள்ளது.

அணைக்கு 1071 கன அடி தண்ணீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 768 மில்லியன் கன அடியாக உள்ளது. பெரியாறில் 58 மி.மீ, தேக்கடியில் 12.4 மிமீ மழை அளவு பதிவாகியுள்ளது.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் விரைவில் திறக்கப்படும் என்பதால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Leave a comment