இந்துக்களை கொச்சைப்படுத்தவே மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி – வடிவேல் சுரேஸ்

269 0

காதர் மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டிலுள்ள இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 7 பேருக்கு இன்று பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன. குறித்த நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்படி, காதர் மஸ்தானுக்கு வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், இந்து விவகார பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளன.

இங்கு முஸ்லிமொருவருக்கு எவ்வாறு , இந்து விவகார பிரதி அமைச்சுப் பதவியை வழங்கமுடியும். நல்லாட்சியில் ஒரு இந்துக்களும் இல்லையா குறித்த அமைச்சுப்பதவியை வழங்குவதற்கு.

இந்த செயற்பாடு இந்துக்களை கொச்சைப்படுத்தும் அவமானப்படுத்தும் செயற்பாடாக அமைந்துள்ளது. இதனை எந்தவொரு இந்துவும் அனுமதிக்க முடியாது.

இது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாது போனால் நாட்டிலுள்ள அனைத்து இந்துக்களின் எதிரப்பையும் சந்திக்க நேரிடும்.

இதேவேளை, காதர் மஸ்தானும் நானும் இயல்பாகவே நல்ல நண்பர்கள். எனக்கும் அவருக்குமிடையில் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது. இவ்வாறு முஸ்லிம் ஒருவருக்கு இந்து விவகாரம் தொடர்பில் ஒரு அமைச்சுப்பொறுப்பை வழங்கினால் இந்துக்கள் இந்த விடயத்தை எவ்வாறு நோக்குவரென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment