கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் கர்ப்பினிதாயொருவர் குழந்தையை பிரசவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக ஹபரனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புகையிரதத்தில் பயணம் செய்துகொண்டிருந்த கர்ப்பிணி தாய் ஒருவர் குழந்தையை பிரசவிக்கும் நிலையில் உள்ளதாக புகையிரத அதிகாரிகள் ஹபரனை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வைத்தியசாலைக்கு அறிவித்து குடும்ப சுகாதார அதிகாரி உள்ளிட்ட சுகாதார ஊழியர்களுடன் ஹபரனை புகையிரத நிலையத்துக்கு விரைந்துள்ளனர்.
எனினும் அவர்கள் அங்கு செல்லும் போது குறித்த தாய் குழந்தையை பிரசவித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் குடும்ப சுகாதார அதிகாரியால் ரயில் பெட்டியினுள்ளேயே வைத்து தேவையான அடிப்படை சுகாதார சேவைகளை மேற்கொண்டு தாயையும் குழந்தையையும் ஹபரனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தம்புள்ளை வைத்திய சாலைக்கு மாற்றியுள்ளனர்.
தற்பொழுது குறித்த தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.