இரண்டுக்கு மேற்பட்ட பிள்ளைகளை பெற்றுக்கொள்ளும் ஒருவருக்கு 84 நாட்கள் மகப்பேற்று விடுமுறை வழங்குவதற்கான சட்ட திருத்தத்திற்கு நேற்று பாராளுமன்றம் ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியது.
தொழில் புரியும் பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேற்று முறைகள் தொடர்பான சட்ட திருத்தங்கள் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
மகப்பேற்று நன்மைகள் (திருத்த) சட்டமூலம் மற்றும் கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும், வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்ட திருத்தம் என்பன நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் கயந்த கருணாதிலக இந்த திருத்தங்களை சபையில் சமர்ப்பித்தார்.
இந்த திருத்தங்களுக்கு அமைய பெண் ஒருவர் மகப்பேற்றுக்காக பெற்றுக்கொள்ளும் விடுமுறை 84 தினங்கள் ஆகும். அதாவது இதுவரை முதல் இரு குழந்தைகளுக்கு மாத்திரம் 84 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது.
இத் திருத்தத்துக்கு அமைய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகளை பெற்றுக்கொள்ளும் ஒருவருக்கும் 84 நாட்கள் மகப்பேற்று விடுமுறை வழங்கப்படும். குழந்தை பிறக்கும் திகதிக்கு இரண்டு வாரங்கள் முன்னரும், குழந்தை பிறந்த திகதியிலிருந்து 10 வாரங்களும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என இந்தத் திருத்தங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.