மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் என்னிடம் கூறிவிட்டு சிங்கப்பூர் செல்லவில்லை. தற்போது அவர் எனது பொறுப்பில் இல்லை. மத்திய வங்கியில் பணிபுரியும் போது என்னிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் தற்போது அவர் மத்திய வங்கியில் சேவையில் இல்லை. எனது நண்பர் என்பதற்கான அவர் செல்லுமிடங்களை கூறவேண்டியதில்லை.
ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நான் அவருடன் தொடர்பு கொள்ளவில்லை. தற்போது எமக்கிடையில் எந்த தொடர்பும் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.
அத்துடன் உதயங்க வீரதுங்க, அர்ஜூன மகேந்திரன் மற்றும் ஜாலிய விக்கிரமசூரிய ஆகியோருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு அறிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை இலங்கை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அநுர குமார திஸாநாயக்க கேள்வி எழுப்பும் போது,
நீதிமன்றத்தின் வாயிலாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க, முன்னாள் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளனர். ஆகவே அவர்களை கைது செய்து இலங்கை அழைத்து வருவதற்கு அரசாங்கம் என்ற வகையில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
இதனையடுத்து பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
ஜாலிய விக்கிரமசூரிய, அர்ஜூன மகேந்திரன் மற்றும் உதயங்க வீரதுங்க ஆகிய மூவரும் தற்போது பிடியாணை விடுக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டில் உள்ளனர். இவர்களை கைது செய்து இலங்கை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மூவர் தொடர்பில் நீதிமன்றம் வாயிலாக பல்வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்களது சொத்துகள் பல முடக்கப்பட்டுள்ளன.
ஜாலிய விக்கிரமசூரிய
ஜாலிய விக்கிரமசூரிய 2008 முதல் 2014 ஆம் ஆண்டு வரைக்கும் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக பணியாற்றி வந்தார். இதன்போது வாஷின்டனில் உள்ள இலங்கை தூதரக காரியாலயத்திற்கு புதிய கட்டடமொன்றை பெற்றுக்கொள்வதற்காக பெறப்பட்ட 3 இலட்சம் டொலரை மோசடியான முறையில் பாவனைக்குட்படுத்தியமைக்காக நீதிமன்றத்தின் பிடியாணை மூலமாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் 50 ஆயிரம் பிணையின் ஊடாகவும் 10 இலட்சம் ரூபா ஆட் பிணையின் ஊடாகவும் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு பிணை வழங்க கையொப்பமிட்டு இருவருடன் சேர்ந்து அவர் வெளிநாட்டுக்கு சென்று தலைமறைவாகியுள்ளார். தற்போது அவரை கைது செய்ய உத்தியோகபூர்வ அறிவிப்பும் சர்வதேச பொலிஸின் உதவியுடன் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இவருக்கு சொத்துகள் மீது விசாரணை செய்யப்பட்டு முடக்கப்ப்பட்டுள்ளது.
உதயங்க வீரதுங்க
அதேபோன்று ரஷ்யாவின் இலங்கைக்கான தூதுவராக 2006 முதல் 2015 ஆம் ஆண்டு வரைக்கும் பணியாற்றிய உதயங்க வீரதுங்க இராணுவத்திற்கான மிக் விமான கொள்வனவின் போது நிதி மோசடி செய்தமைக்காக நீதிமன்ற பிடியாணை விடுக்கப்ட்ட போதிலும் அவர் வருகை தரவில்லை. அவருக்கு எதிராக உத்தியோகபூர்வ அறிவித்தலும் சர்வதேச பொலிஸின் உதவியுடன் சிவப்பு அறிவித்தலும் விடுக்கப்பட்ட தற்போது அபுதாபி பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் சம்பந்தப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் உள்ள கணக்குகள் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக ஹொங்கொங் வங்கியின் கணக்குகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. தற்போது அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அர்ஜூன மகேந்திரன்
அத்துடன் இலங்கை மத்திய வங்கியில் 2015 முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஆளுநராக பணியாற்றிய அர்ஜூன மகேந்திரன் தொடர்பில் நீதிமன்ற பிடியாணை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் வருகை தரவில்லை. அதனால் அவரின் சிங்கப்பூர் முகவரி தேடினால் அவர்கள் அங்கு வசிப்பில் இல்லை. இதனையடுத்து அவருடை தொலைபேசி இலக்கத்திற்கு குறுந்தகவல் விடுக்கப்பட்டுள்ளதுடன் மின்னஞ்சலின் ஊடாக பிடியாணை பிறபிக்கப்பட்ட விபரம் அனுப்பி வைக்கப்பட்டது. என்றாலும் தற்போது அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸ் உதவியுடன் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்து இலங்கை அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.
இதன்போது அநுர குமார திஸநாயக்க எம்.பி கேள்வி எழுப்பும் போது,
அர்ஜூன் மகேந்திரன், உதயங்க வீரதுங்க மற்றும் ஜாலிய விக்கிரமசூரிய ஆகியோரின் நியமனங்கள் அரச நியமனங்களாகும். அவர்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் பிரதமரின் நண்பராகும்.அடுத்த இருவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்புடையவர்களாகும். ஆகவே இவர்களை அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
இதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளிக்கையில்
இந்த மூவரின் நியமனங்கள் அரச நியமனங்களாகும். அதற்காகவே அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த மூவரையும் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமரிடன் மீண்டும் கேள்விகளை தொடுத்த அநுர குமார திஸாநாயக்க,
அர்ஜூன மகேந்திரன் உங்களுடைய நண்பராகும். இதற்கு முன்னர் சிங்கப்பூர் சென்ற போது உங்களிடம் திருமண வீட்டுக்கு செல்வதாகவே கூறிவிட்டு சென்றதாக சபையில் கூறினீர்கள். சர்வதேச பொலிஸ் மீது பாரம் சுமத்தாமல் அவரை இலங்கை அழைத்து வர முடியுமா? தற்பபோதைய பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியும் நினைத்தால் இந்த மூவரையும் இலங்கை அழைத்து வர முடியும் அல்லவா?
இதன் போது பதிலளித்த பிரதமர் கூறுகையில்,
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் என்னிடம் கூறிவிட்டு சிங்கப்பூர் செல்லவில்லை. தற்போது அவர் எனது பொறுப்பில் இல்லை. மத்திய வங்கியில் வேலை செய்யும் போது என்னிடம் கூறி சென்றார். தற்போது இந்திரஜித் குமாரசுவாமி உட்பட எனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள் என்னிடம் அனுமதி கோரியே வெளிநாடு செல்கின்றனர்.எனது நண்பர் என்பதற்கான அவர் செல்லுமிடங்கள‍ை கூறவேண்டியதில்லை.
மத்திய வங்கியில் இருக்கும் போது என்னுடன் தொடர்பில் இருந்தார். என்றாலும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நான் அவருடன் தொடர்பு கொள்ளவில்லை. தற்போது எமக்கிடையில் எந்த தொடர்பும் இல்லை. சிங்கப்பூரில் இடைக்கிடையே வீடு மாறுவது வழக்கமாகும். அவரும் வீடுகள் மாறி மாறி இருந்தார்.தற்போது அவரது முகவரியில் அவர் இல்லை. என்றாலும் அவரை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.