போருக்கு பின்னரான காலத்தில் இளைஞர், இளம் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை அறிந்து கொள்ளும் நோக்கில் தமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு விரைவில் நடைபெறும் என்று மாகாண முதலைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்த இளைஞர் மாநாட்டுக்கான ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. அதில் உரையாற்றிபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு மக்கள் இயக்கம். தமிழ் மக்கள் பேரவை, கட்சி அரசியலில் ஈடுபடாது தமிழ் மக்களின் விடிவு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகின்றது.
தமிழ்ச் சமுதாயம் அறிவு பெற வேண்டும், ஆற்றல் பெற வேண்டும், ஆதரவு பெற வேண்டும், தமிழ்ச் சமுதாயத்துக்கு அதன் சகல மட்டங்களிலும் இருந்து அனுசரணை கிட்ட வேண்டும் என்ற ரீதியில் இளையோரைப் பலம் மிக்கவர்களாக ஆக்க இவ்வாறான ஒரு இளையோர் மாநாட்டை வெகுவிரைவில் கூட்ட உள்ளோம்.
இந்த மாநாட்டில் எமது இளைய சமுதாயத்துடன் சேர்ந்து சில முக்கியமான விடயங்களைக் கலந்தாலோசிக்க உள்ளோம். அரசியல் ரீதியாக சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவகையில் எமது உரிமைகளைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய இருக்கின்றோம்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாவட்டங்கள், பிரதேசங்கள் தோறும் இளைஞர் அணிகளை உருவாக்குவது பற்றி ஆராய இருக்கின்றோம். -என்றார்.
நிகழ்வில் இளைஞர்கள், ஊடகவியாலாளர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர். மாநாடு ஜூலை மாத நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.