சாவகச்சேரி நகரசபைக்கு எதிராக சமுர்த்தி பயனாளிகள் ஆர்ப்பாட்டம்…

259 0

சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவுக்குரிய சமுர்த்தி வங்கிக் கட்டடம் அமைப்பதற்கு நகர சபை அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி சாவகச்சேரி சமுர்த்திப் பயனாளிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2012ஆம் ஆண்டு சாவகச்சேரியில் சமுர்த்தி வங்கி அமைப்பதற்கான காணி வழங்குவது தொடர்பாக அனைத்து ஆவணங்களுகளும் தென்மராட்சிப் பிரதேச செயலாளரால் காணித் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.

2013ஆம் ஆண்டில் அப்போது யாழ் மாவட்ட அரச அதிபராக இருந்த சுந்தரம் அருமைநாயகத்தால் சமுர்த்திக் கட்டடம் அமைக்குமாறு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அந்தக் காணியில் கட்டடம் அமைப்பதற்காக சமுர்த்தித் திணைக்களத்தினரால் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சமுர்த்தி வங்கிக்கு வழங்கப்பட்ட காணியில் கட்டடம் அமைப்பதற்கான நிர்மாணப் பொருள்கள் பறிக்கப்பட்டிருந்த நிலையில், கட்டட நிர்மாணப் பொருள்களை சாவகச்சேரி நகர சபை அபகரித்துள்ளதாக சமுர்த்தி திணைக்களத்தினரால் சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குத் தாக்கத் செய்யப்பட்டது.

அப்போதைய சாவகச்சேரி நகர சபைத் தவிசாளரால் அந்தக் காணியில் சமுர்த்தி வங்கி கட்டடம் அமைப்பதற்கு அனுமதி வழங்குவதாகத் தெரிவித்து அந்த வழக்கு முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து சமுர்த்தி வங்கிக்குரிய கட்டடம் அமைப்பதற்கு இதுவரை சாவகச்சேரி நகர சபை இடையூறு விளைவித்து வருவதாகத் தெரிவித்து இன்று சாவகச்சேரியில் சமுர்த்திப் பயனாளிகளின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், சமுர்த்திப் பயனாளிகள் சாவகச்சேரி நகர சபைக்கு எதிராகக் கோசங்களை முன்வைத்து ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.

சாவகச்சேரி பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஆரம்பமான இந்தப் பேரணி தென்மராட்சி பிரதேச செயலகத்துக்கு சென்று பிரதேச செயலருக்கு மனுக் கையளிப்புடன் நிறைவுபெற்றது.

Leave a comment