இன்புளுவென்சா தொடர்பில் ஆராய, தென் மாகாணத்துக்கு எந்தச் சுகாதார அதிகாரியும் செல்லவில்லையென்றும் இன்புளுவென்ஸா நோய்த் தடுப்பு ஊசியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பத்திரண கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், காய்ச்சல் காரணமாக தென் மாகாணத்தில் பாடசாலைகள் மூடப்பட்டாலும் பிரத்தியேக வகுப்புகள் நடைபெறுவதாகவும், தென் மாகாண நிலைமையைக் கருத்திற்கொண்டு, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையைப் பிற்போடுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (5) நடைபெற்ற வாய்மூல கேள்வி எழுப்பும் நேரத்திலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது உரையாற்றியபாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க
“இன்புளுவென்ஸா வைரஸ் தோற்றால், காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் இதுவரை 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனரெனச் சுட்டிக்காட்டியதுடன், 10,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தற்காலிகமாக பாடசாலைகளை மூடினாலும், இந்தக் காய்ச்சலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
எனவே, இதுத் தொடர்பான உண்மையானத் தகவல்களை அரசாங்கம் மற்றும் சுகாதாரத் தரப்பினர் வெளிப்படுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அரசாங்கம் இதற்காக இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னவென்றும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஒவ்வொரு வருடமும் குறித்த காலப்பகுதியில் இவ்வாறானத் தொற்றுநோய்கள் பரவுவதாகவும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சுவரொட்டிகள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் குறித்த நோய்த் தொடர்பில், அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு 3 விசேட வைத்திய நிபுணர்களும் 40 சிறப்பு தாதியர்களும் அனுப்பப்பட்டு உள்ளனரெனவும் அவர் தெரிவித்தார்