வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, திருப்பதி ஏழுமலையானின் நகைகளை பக்தர்களின் பார்வைக்கு வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமான தங்க, வைர நகைகள் குறித்து தற்போது பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தேவஸ்தான தலைமை அர்ச்சகராக பதவி வகித்து வந்த ரமண தீட்சிதர், ஏழுமலையானின் நகைகள் பல மாயமாகிவிட்டதாகவும், மைசூர் மகாராஜா காணிக்கையாக அளித்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிங்க் வைரத்தை காணவில்லை எனவும் புகார் எழுப்பினார்.
ஏழுமலையானின் அனைத்து நகைகளையும் பக்தர்களின் கண்காட்சிக்கு வைக்க அறங்காவலர் குழுவில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இதற்கு ஆகம விதிகள் ஒப்புக்கொள்கிறதா என்பதை அறிய, ஆகம வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்கப்பட உள்ளது. அதேபோல், சட்ட வல்லுநர்களிடமும் அலோசனை கேட்கவுள்ளோம். இதையடுத்து, இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.
திருப்பதி ஏழுமலையானுக்கு சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள், விஜய நகர பேரரசர்கள், மைசூர் மகாராஜாக்கள், ஆங்கிலேயர்கள், நவாப்புகள், ஜமீன்கள், மிராசுதாரர்கள் உட்பட தற்போதைய அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பலர் கோடிக்கணக்கிலான தங்க, வைர ஆபரணங்களை காணிக்கையாக வழங்கி உள்ளனர். இதன் மதிப்பு பல்லாயிரம் கோடி இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த நகைகள் யாவும், பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டால் அதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டியிருக்கும்.