பாகிஸ்தானில் ராணுவத்திற்கு எதிராக குரல் கொடுத்து வந்த காரணத்திற்காக கடத்தப்பட்ட பெண் பத்திரிகையாளர் குல் புஹாரி இன்று பத்திரமாக வீடு திரும்பினார்.
பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலர் குல் புஹாரி. இவர் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரான கருத்துகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வந்தார். வருகின்ற ஜூலை மாதம் 25-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இவரது கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன.
இந்நிலையில், நேற்று இரவு புஹாரி லாகூர் நகரில் டிவி புரோகிராம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் புஹாரியை கடத்தி சென்றது. அவர்கள் முகத்தில் முகமுடி அணிந்திருந்ததால் யார் என்பது குறித்து தெரியவில்லை என புஹாரியின் கணவர் கூறினார்.
புஹாரி கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடத்தப்பட்ட சில மணி நேரங்களில் புஹாரி பத்திரமாக வீடு திரும்பினார். அவர் நலமாக இருப்பதாக அவர் கணவர் தெரிவித்தார்.
கடத்தியவர்களில் ஒருவர் ராணுவ உடை அணிந்திருந்தாக புஹாரி தெரிவித்தார். ஆனால் இதுகுறித்து ராணுவத்தினர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கடந்த 6 மாதங்களாக புஹாரி பல பிரச்சனைகள் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறார்.