எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் 67 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஆளும் அதிமுக அரசு பல்வேறு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் என ஏற்பாடு செய்து எம்.ஜி.ஆரின் புகழ்பாடியது.
அவ்வகையில், எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய அரசு முடிவு செய்தது. அதன்படி, 25.02.18 அன்று 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யவுள்ளதாகவும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அரசு அறிவித்தது.
இதையடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள ஆயுள் கைதிகள் கணக்கெடுக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக விடுதலை செய்யப்பட உள்ள 67 கைதிகள் தேர்வு செய்யப்பட்டு அந்த பட்டியலை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. நன்னடத்தை குழு பரிந்துரையின்படி இந்த 67 பேரை விடுவிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தது.
அதன்படி, முதற்கட்டமாக 67 ஆயுள் தண்டனைகளும் இன்று புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்களின் மறுவாழ்விற்காக அனைவருக்கும் பெட்ரோல் பங்குகளில் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் வேலை வழங்க சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பணியில் சேருவதற்கு ஆர்வம் இருந்தால் பின்னர் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.