நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய காலநிலையும், மேகமூட்டமான நிலைமையும் மேலும் தொடரக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேல் பருவப்பெயர்ச்சி காரணமாக நாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காணப்படும் காற்றுடன் கூடிய காலநிலை நாளை முதல் மேலும் வலுவடையக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். குறிப்பாக மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான மழை பதிவாகக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்பாறை , பதுளை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் சில இடங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
தென் மாகாணத்திலும் மொனராகலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு காற்று வீசக்கூடும் .
புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்கரை பகுதிகளிலும் ,மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரை பகுதிகளிலும் காற்று 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.
இதன் காரணமாக கடலில் பயணம் செய்வோரும், மீனவர்களும் அவதானமாகச் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.