ஈழத்தமிழினம் எழவேண்டும் என்பதற்காக 1974 ஆம் ஆண்டு ஜுன் 5ஆம் நாள் மரவள்ளித் தோட்டத்து செம்மண்ணில் சிவகுமாரன் வீழ்ந்து கிடந்தான்.
எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது எனும் உயரிய கோட்பாட்டை தனக்கு தானே வகுத்து சிறிலங்கா காவல் துறையால் துரத்தப்படும் போது தோட்ட வெளிகளால் ஓடிக் கொண்டிருந்தான். மரவள்ளித்தடி குத்திய காயத்தால் அவன் வீழ்ந்து விட்டதால் சிறிலங்கா காவல்துறை அவனை நெருங்கி விட்டது. இனி தப்ப முடியாது என்பதனை நொடிப்பொழுதில் முடிவெடுத்த யாழ். இந்துக்கல்லூரியின் மைந்தன் சயனைட் அருந்துகின்றான்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்வன் அங்கு தனது மூச்சை நிறுத்திக் கொண்டான். ஈழப்போராட்டத்தில் சயனைட்டை அறிமுகம் செய்து புதிய வரலாற்றைத் தொடக்கி வைத்தான். தேசவிடுதலைக்காய் முதல் களப்பலியாகி இளைஞர்களின் இதயத்தை கொள்ளை கொண்டான்.
இது பற்றி தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் எழுதுகையில் “ விடுதலை உணர்வு மிக்க துணிச்சலும் கொண்ட ஒரு மகத்தான வீரனை இழந்து தமிழீழம் துயரில் ஆழ்ந்தது” என்றார்.
சிவகுமாரன் தனது சம காலத்தவரான தலைவர் பிரபாகரனுடன் இணைந்து செயற்பட சந்தர்பம் கிடைக்கவில்லை. ஆனால் அவருடன் இணைந்து செயற்பட தான் விரும்பியதாக தலைவர் பிரபாகரன் கூறினார். ஆனால் காலம் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவில்லை.
தலைவர் பிரபாகரனை போல் எண்ணமும் , சிந்தனையும் செயலும் கொண்ட ஓர் அற்புதமான வீரனை போராட்ட ஆரம்பத்திலேயே இழந்தது தமிழ் இனத்தின் துரதிஸ்டமே.
மாணவனாக இருந்த வேளை பல் வேறுபட்ட தூர நோக்கம் கொண்ட அரசியல் வேலைகளையும் குறிப்பாக மலையக தமிழர்களின் உறவை பேணவேண்டும் என்பதனையும் கவனத்தில் கொண்டு செயற்பட்டான். அதே வேளை அரசியல் செயற்பாடு மட்டுமல்ல ஆயுத ரீதியிலான நடவடிக்கைகளையும் சிவகுமாரன் செயற்படுத்தினான்.
அப்போதைய யாழ். மேயர் துரையப்பாவின் காருக்கு குண்டு வைத்தது, ஐக்கிய முன்னணி அரசின் அமைச்சராக இருந்த சோமவீர சந்திரசிறியின் காருக்கு உரும்பிராயில் வைத்து குண்டெறிந்தமை போன்றன குறிப்பிடத்தக்கது.
மாணவனாக இருந்த மிக குறுகிய காலத்தில் மிகச் சவாலான பணிகளை வசதிகள் ஏதும் அற்ற ஆபத்தான சூழ் நிலையிலும் மிக சொற்ப ஆள் பலத்துடன் அயராது உழைத்து இந்த மாணவ தலைவன் எம் மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியானன்.
மாணவர்களுக்கு முன் உதாரணமான முதற் தற்கொடையாளர் தியாகி பொன்.சிவகுமாரன் வீரச்சாவடைந்த நாளான ஜூன் 05 ஆம் திகதியை தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக பிரகடனப்படுத்த முற்பட்ட போது ஜூன் 05 ஆம் நாள் சர்வதேச சூழல் தினம் என்பதால் உலக ஒழுங்குடன் இணைந்து பயணிக்க வேண்டியதை கருத்தில் கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஜூன் 06 ஆம் திகதியை தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தியதுடன் நினைவும் கூரப்பட்டு வருகின்றது.
மாணவர் சக்தி மாபெரும் சக்தி என வரலாறாகிப் போன மாணவப் போராளி தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் நினைவு நாளான இன்று இளைய தலைமுறையினர் தாயத்திலும் புலத்திலும் அறிவால் தம்மை மேம் படுத்தி எம் தாயக்கனவை நினைவாக்குவோம் என உறுதி எடுத்துக் கொள்வோமாக.