நடப்பு ஆண்டு இறுதியில் ரஷ்யா-பாகிஸ்தான் ராணுவத்தினர் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.
பாகிஸ்தானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நீண்ட காலமாக பனிப்போர் நீடித்து வந்தது. அமெரிக்காவுடன் நல்லுறவு கொண்டிருந்த பாகிஸ்தான், 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு அந்நாட்டுடனான நல்லுறவை படிப்படியாக குறைத்து வந்தது. 2011 ஆம் ஆண்டு பின்லேடனை அமெரிக்க ராணுவம் அபோதாபாத்தில் சென்று தாக்குதல் நடத்தி கொன்றதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. அதேபோல், அண்மையில் பாகிஸ்தானுக்கு எப்-16 ரக போர் விமானங்கள் வழங்கும் அமெரிக்கா அரசின் முடிவுக்கும் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முடக்கினர்.
அமெரிக்காவுடனான உறவில் கசப்புணர்வு ஏற்பட்டதையடுத்து, போர் விமானங்கள் போன்றவற்றை வேறு நாடுகளிடம் பெறும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டது. மத்திய கிழக்கு நாடான ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளிடம் பாகிஸ்தான் முயற்சித்த நிலையில், மி-35 ரக ஹெலிகாப்டர்களை பாகிஸ்தானுக்கு விற்க ரஷ்யா ஒப்புதல் அளித்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்த ஒப்பந்தத்தையடுத்து இருநாடுகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடவும் சம்மதித்தன.
நடப்பு ஆண்டு இறுதியில் ரஷ்யா-பாகிஸ்தான் ராணுவத்தினர் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடவுள்ளனர் என்று ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் குவாசி கலிலுல்லா தெரிவித்துள்ளார். இந்த பயிற்சியில் இரு நாடுகளிலும் இருந்து 200 ராணுவ வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று இந்த பயிற்சி ”பிரண்ட்ஷிப்- 2016” என அழைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.ஆனால், இந்த பயற்சியின் தன்மை மற்றும் எந்த தேதியில் நடைபெறும் என்ற தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. இருநாடுகளும் இணைந்து பயற்சி மேற்கொள்ள உள்ளது இதுதான் முதல் முறையாகும்.
இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக விளங்கும் ரஷ்யா, பாகிஸ்தானுடன் இணைந்து ராணுவ பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக வெளியாகயுள்ள தகவல் உலக அரங்கில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.