அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன்களில் ஒருவனான அபு முஹம்மது அல்-அட்னானி கொல்லப்பட்டதாக பென்டகன் தகவல் வெளியிட்டு உள்ளது.
சிரியாவில் உள்ள அல்-பாப் நகரம், ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடந்த 2014-ம் ஆண்டு கைப்பற்றப்பட்டது. அந்த நகரை மீட்க அமெரிக்கா தலைமையிலான உலக நாடுகளின் படை தாக்குதல் தொடுத்து, நகரை கைவசப்படுத்த தொடங்கியது. கடந்த மாதம் அமெரிக்கா அல்-பாப் நகரில் தீவிரவாதிகளை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஐ.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவனான அல்-அட்னானி கொல்லப்பட்டதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் உறுதிசெய்து உள்ளது.
ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்தல், ஆள் சேர்த்தல் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் அனைத்திற்கும் திட்டமிட்டவனான அல்-அட்னானி பயணம் செய்த காரை குறிவைத்து ஆகஸ்ட் 30-ம் தேதி அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் அவன் கொல்லப்பட்டுள்ளான். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் முக்கிய செய்தி தொடர்பாளர் இவன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் கடந்த வருடங்களில் அரங்கேறிய மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டவன். பாரீஸ், பிரஸ்ஸல்ஸ் மற்றும் இஸ்தான்புல் விமான நிலையம், வங்காளதேச ஓட்டல் தாக்குதல்களில் முக்கிய பணிகளை மேற்கொண்டவன் இவன்தான். மேலும், அங்காராவில் பேரணியின் போது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது, ரஷிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது போன்ற தீவிரவாத தாக்குதல்களிலும் மூளையாக செயல்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது.